ஆர்.பி.ஐ கவர்னர் சக்தி காந்த தாஸ், “சமீபத்தில் ‘கரன்சி மற்றும் நிதி’ என்ற தலைப்பில், ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் காரணமாக ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் நடுத்தர பணியாளர்கள், கிளர்க் போன்ற பணிகளின் தேவை இனி இல்லாமல் போவதற்கும் வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், உலகளவில் வங்கித்துறையில் கீழ்மட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் தாக்கம், இந்தியாவிலும் எதிரொலித்து வருகிறது. டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் தொலைவில் இருந்து பணியாற்றும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அதிக திறன் கொண்டவர்களுக்கு ஒரு ஊதியம், குறைந்த திறன் கொண்டவர்களுக்கு குறைந்த ஊதியம் என்கிற வேலைவாய்ப்பு சந்தையும் உருவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 – 2011-ம் நிதியாண்டில், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், 2022-23-ம் நிதியாண்டில், இது 74:26 என்ற விகிதமாக மாறி உள்ளது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிப்பு காரணமாக வேலையிழப்பு ஏற்படுமா என தொழில்நுட்ப வல்லுநரும் Prime fort நிறுவனருமான ஸ்ரீராமிடம் கேட்டபோது, “வங்கித்துறை மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக தங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். 100 பேர் செய்கிற வேலையை 50 நபர்களை வைத்தும் செய்யலாம் என்கிற சூழ்நிலை நிலவும்போது ஆள்குறைப்பு நடைபெறுவது சகஜம்தான்.
ஆனால் அதே சமயம் மனிதன் செய்யும் அனைத்து வேலைகளையும் தொழில்நுட்ப உதவியால் செய்ய முடியாது என்பதை அனைத்து துறை சார்ந்தவர்களும் உணர வேண்டும். அண்மையில் எல்லோராலும் பேசப்பட்ட CHAT GPT-யால் ஒரு சில வேலைகளை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறன் உடையவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2023-ல் நடைபெற்ற ஒட்டுமொத்த பணியமர்த்தலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள், 16.80% பங்களிப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.