1943-ம் ஆண்டு சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டு வீசப் போவதாக வந்த செய்தி, சென்னை மாகாண மக்களையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க வைக்கிறது. இந்நிலையில், பிரிட்டீஷாரால் கைது செய்யப்பட்ட தன் தம்பியைக் கூட்டிவர, சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவரான குமரன் (யோகி பாபு), தனது பாட்டி முத்துமாரியுடன் (குலப்புள்ளி லீலா) பிரிட்டிஷ் காவல்துறையை அணுக, அங்கே அவர் அவமானப்படுத்தப்படுகிறார். இரண்டு நாள்களில் தங்கைக்குத் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தம்பியை மீட்க முடியாதச் சோகத்திலிருக்கும்போது, சென்னையைப் போர் விமானங்கள் சுற்றி வளைக்கின்றன. உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் குமரனும், அவரது பாட்டியும் அவர்களுடைய படகில் ஏறி, குண்டுகள் விழாத நடுக்கடலுக்குச் செல்ல எத்தனிக்கிறார்கள்.
அவர்களுடன், முதியவரான நாராயணனும் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் லட்சுமியும் (கௌரி ஜி கிஷன்), கர்ப்பிணியான விஜயாவும் (மதுமிதா) அவரது மகன் மகேஷும் (அக்ஷத்), நூலகரான முத்தையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்), எழுத்தாளரான ராஜாவும் (ஷா ரா), வியாபாரியான சேட்டும் (சாம்ஸ்) படகிலேறி, நடக்கடலுக்குச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் பல பிரச்னைகள் தலையெடுக்கின்றன. அவற்றை எப்படி படகிலிருந்தவர்கள் சமாளித்தார்கள், குமரனுடைய தங்கையுடைய கல்யாணம் என்ன ஆனது, தன் தம்பியைக் குமரன் மீட்டாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது சிம்புதேவனின் ‘போட்’.
தன் வழக்கமான ஒன்லைன் காமெடி அலைகளை இந்தப் படத்திலும் இழுத்து வந்திருக்கும் யோகி பாபு, சில இடங்களில் மட்டும்தான் சிரிக்க வைக்கிறார். அதேநேரம், எமோஷனலான இடங்களில் தேவையான நடிப்பையும் இறுக்கத்தையும் வழங்கி, கதாநாயகனாகக் கரைசேர்கிறார். தன் முதிர்ச்சியான அணுகுமுறையால், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை ஆழமாக்க முயன்றிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். சமூக கருத்துகளை நக்கலாக ஒன்லைனில் அடிக்கும் ஸ்டைல் நச்! மிரட்டல் உடல்மொழி, உருட்டல் வாய்மொழி என டெம்ப்ளட்டான பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியாக வந்தாலும், சின்ன சின்ன வஞ்சக உடல்மொழியால் பயத்தை விதைக்கிறார் ஜெஸ்ஸி. பாடும் திறமை, நற்குணம், கதாநாயகன் மீதான காதல் என ‘அக்மார்க்’ தமிழ் சினிமா கதாநாயகியாக வந்து போகிறார் கௌரி ஜி.கிஷன்.
ஷா ரா, மதுமிதா ஆகியோரின் கதாபாத்திரங்கள் கவனிக்கத்தக்க வகையில் அறிமுகமானாலும், அவை ஆழமாக விரியவில்லை. அதில், ஷா ராவும் மதுமிதாவும் கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். வெறுப்பைச் சம்பாதிக்கும் கதாபாத்திரத்தில், தேவையான பங்களிப்பை வழங்கி படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் சின்னி ஜெயந்த். சாம்ஸ் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்க, குலப்புள்ளி லீலா, சிறுவன் அக்ஷத் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
சுற்றிலும் ஆழ்கடல், ஒரேயொரு படகு, அதில் 10 மனிதர்கள் என்ற கதைக்களத்தை முடிந்தளவுக்கு ரிப்பீட் அடிக்காமல் சுவாரஸ்யமாக தன் கேமராவால் படமாக்கி (வரைகலை உதவியுடன்), தன் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். பக்கம் பக்கமான வசனக் காட்சிகளை வடிகட்டாமல் பொங்கி வழியவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். ஜிப்ரான் இசையில் ‘சோக்கா நானும் நிக்கிறேன்’ பாடல் கொஞ்சம் ரசிக்க வைத்தாலும், திரைக்கதையின் துடுப்புக்குத் தடைபோடுகிறது. கடலைப் போல எந்நேரமும் இடைவிடாமல் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. அது சில காட்சிகளை மட்டும் மெருகேற்ற உதவியிருக்கிறது.
ஒரு படகில் வெவ்வேறு சூழ்நிலைகளையும், மனநிலைகளையும் கொண்ட மனிதர்கள், அவர்களுக்குப் பொதுவான ஒரு குறிக்கோளும், தனித்தனியான குறிக்கோளும் இருக்க, அதை நிறைவேற்ற, அவர்கள் என்னென்ன அவதாரங்கள் எடுக்கிறார்கள், எந்தெந்த எல்லைகளுக்குச் செல்கிறார்கள் என்பதைக் காட்ட முயன்றிருக்கும் இயக்குநர் சிம்புதேவன், அம்முயற்சியில் பாதி கடலையல்ல, பாதி கடற்கரையையே தாண்டமுடியாமல் தரைதட்டி நிற்கிறார்.
சென்னையின் பூர்வக்குடி மீனவர்களின் சமூக நிலை, பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா, அபத்தமான சாதி அடுக்குகளும், சாதிய பாகுபாடுகளும், கோயில் நுழைவு போராட்டம், உணவு அரசியல், நீதிக்கட்சி, காங்கிரஸ், முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சிகளின் சமூக/விடுதலை போராட்ட பங்களிப்புகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாலுள்ள அரசியல், நேதாஜியின் ஐ.என்.ஏ படை, மகாத்மா காந்தியின் படுகொலை எனப் பல விஷயங்களை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல் நறுக்கெனப் பேசி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன சில வசனங்கள். பிரிட்டிஷ் மகாராஜா தொடங்கி, இங்கேயுள்ள உழைக்கும் மக்கள் வரைக்கும் விரிந்திருக்கும் சமூக படி நிலையை காமெடியாக விவரிக்கும் காட்சி கலக்கல்! ஆனால், ஒரு கட்டத்தில் வசனங்களே ஓவர் டோஸ் ஆக மாறிவிட, அந்தக் கடல் முழுக்க வசனங்கள் மட்டுமே மிதந்து பரவி நிற்பதாய் ஓர் உணர்வு. இதுவே ஒரு மேடை நாடக உணர்வையும் படத்துக்குக் கொடுத்து ஏமாற்றம் அளிக்கிறது.
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் திரைக்கதையை, துடுப்புப் போட்டு நகர்த்தத் திருப்புமுனைகளும், சுவாரஸ்யங்களும் இல்லாமல் போனது பெரிய மைனஸ். பயமுறுத்தும் சுறாவும், ஜப்பானின் ரோந்து படகும், சில தருணங்களை மட்டுமே சுவாரஸ்யமாக்க உதவியிருக்கின்றன. ஏனைய இடங்களில், வசனங்களாலேயே நீந்தி, நீந்திக் கரைசேரத் துடிக்கிறது படம். இரண்டாம் பாதியில், படகிலுள்ள கதாபாத்திரங்கள் எடுக்கும் புதுப்புது அவதாரங்களும், அக மனத்தின் கொந்தளிப்புகளும் திரைக்கதையை இறுக்கிப் பிடிக்க முயன்றாலும், மீண்டும் மீண்டும் கொப்பளிக்கும் பக்கம் பக்கமான வசனங்களும், குறிக்கோளே இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் திரைக்கதையும் பெரும் அயற்சியையே தருகின்றன. இறுதிக்காட்சிக்கு முன்பு, மட்டும் கதாபாத்திரங்களின் சில முடிவுகள் ஆச்சரியம் தருகின்றன.
சமூக கருத்தை நறுக்கென்றும், நையாண்டியாகவும் பேசும் வசனங்களும், சிம்புதேவனுக்கேயுரிய ரசிக்க வைக்கும் ஐடியாக்கள் சிலதும் ஒருபக்கம் துடுப்புப் போட்டாலும், மேடை நாடக பாணியிலான மேக்கிங்கும், சுவாரஸ்யமில்லாத நீளமான திரைக்கதையும் மறுபக்கம் இழுப்பதால், கரைசேராமல் கடலிலேயே நம்மைத் தத்தளிக்க விடுகிறது இந்த `போட்’.