மகளிர் குத்துச்சண்டையில் ஆணா? ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை… உலகமே உற்றுநோக்கம் மேட்டர் – முழு விளக்கம்

Paris Olympics 2024, Imane Khelif Gender Controversy: ஒலிம்பிக் தொடர் ஆரம்பித்தாலே வெற்றிகள், தோல்விகள், போராட்டக் கதைகள் ஆகியவை அடுக்கடுக்காக வரும் அதே அளவில் சர்ச்சைக்கும் எந்த குறையும் இருக்காது எனலாம். டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடங்கிய Anti-Sex படுக்கை சர்ச்சை இந்த பாரிஸ் ஒலிம்பிக் வரை நீண்டுள்ளது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால், வீரர்களுக்கு காண்டம் குறைந்தளவில் மட்டுமே வழங்கப்பட்டது. 

அது அப்போது அதிகமாக சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஆனால், அந்த சர்ச்சைக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் (Paris Olympics 2024) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது எனலாம். பாரிஸ் ஒலிம்பிக் கிராமம் முழுவதும் 3 லட்சம் காண்டம்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தொடரின் ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தெரிவித்திருந்தனர். இவற்றையெல்லாம் ஓரங்கட்டி, தற்போது பாலினம் சார்ந்த சர்ச்சை ஒன்றும் தற்போது பூதாகரமாகியிருக்கிறது.  

இமானே கெலிஃப் – பாலின சார்ந்த சர்ச்சை

அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் என்பவரைச் சுற்றிதான் இந்த பாலினம் சார்ந்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவரைச் சுற்றி தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் உள்ளிட்டோர் என பலரும் இதில் கருத்து தெரிவிப்பதற்கான காரணம் என்ன, உலகளவில் இந்த விஷயம் இன்று அதிகம் பேசப்பட்டு வருவதும், இதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து இதில் காணலாம்.

முதலில், இந்த சர்ச்சை எங்கு தொடங்கியது என்பதை பார்ப்போம். பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நேற்று நடந்த மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியன் வீராங்கனை இமானே கெலிஃப், இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி உடன் மோதினார். இந்த போட்டி ஆரம்பித்து வெறும் 46 நிமிடங்களிலேயே, இமானே கெலிஃப்பின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத, ‘உயிரை தற்காத்துக்கொள்ள’ போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், கெலிஃப் வெற்றி பெற்றார். இமானே கெலிஃப்பின் இந்த வெற்றிதான் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

வெற்றிபெற்ற இமானே கெலிஃப் தொடர்பாக சர்ச்சை கிளம்புவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. இவர் பல பிரச்னைகளை எதிர்கொண்டுதான் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கே தகுதிபெற்றார். 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரிலும் இவர் கடைசி நேரத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. மேலும், இமானே கெலிஃப்பிற்கு இது முதல் ஒலிம்பிக்கும் கிடையாது, டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இவர் மோதினார். ஆனால், டோக்கிய ஒலிம்பிக்கிற்கும், இப்போதைய ஒலிம்பிக்கிற்கும் இடையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. 

யார் இந்த இமானே கெலிஃப்?

25 வயதான இமானே கெலிஃப் (Imane Khelif), அல்ஜீரியா நாட்டின் டியரெட் நகரைச் சேர்ந்தவர். இவர் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) தூதராக இருக்கிறார். பெண்கள் குத்துச்சண்டை விளையாடக்கூடாது என்பது இமானே கெலிஃப்பின் மனநிலை ஆகும். ஆனால் அதனை மீறி குத்துச்சண்டை மீது கொண்ட ஈர்ப்பினால் இமானே கெலிஃப் தொடர்ந்து இயங்கிவந்தார். பெரிய போட்டிகளில் தங்கம் வென்று வருங்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே இமானே கெலிஃப்பின் விருப்பப்மாகும். 

2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் காலிறுதி போட்டியிலேயே அயர்லாந்து வீராங்கனை கெய்லி ஹாரிங்டனிடம் தோல்வியடைந்து கெலிஃப் வெளியேறினார். இருப்பினும் அடுத்தடுத்து 2022 ஆப்ரிக்கா சாம்பியன்ஷிப், 2023 அரேபிய விளையாட்டுத் தொடர்களில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். 

என்ன பிரச்னை?

இமானே காலிஃப்பால் என்ன பிரச்னை என நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது, இமானே கெலிஃப்பிற்கு ஆண் குரோமோசோம்கள் அதிகம் இருப்பதாகவும், எனவே இவரை மகளிர் பிரிவில் விளையாட வைப்பது மற்ற போட்டியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதான் சர்ச்சைக்கு முக்கிய காரணம். 

August 1, 2024

நேற்று ஏஞ்சலா கரினி போட்டியில் இருந்து விலகிய பின்னர் சொன்ன வார்த்தைகள் இவைதான்,”எனக்கு மூக்கில் கடுமையான வலி ஏற்பட்டது, உடனே நிறுத்துங்கள் என்றேன். தொடர்ந்து விளையாடுவதை தவிர்ப்பது நல்லது என நினைத்தேன். முதல் அடியிலேயே என் மூக்கில் இரத்தம் சொட்ட ஆரம்பித்தது”. இவரின் பேச்சுதான்  இமானே காலிஃப்பிற்கு எதிர்ப்பு காரணமாக அமைந்தது எனலாம். 

சமூக வலைதளங்களில் சச்சரவு

சமூக வலைதளங்களில் பலரும் பெண்கள் விளையாட்டில் ஆண்களை விளையாட வைப்பது அநீதியாகும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில்,”நானாக இருந்திருந்தால் மகளிர் விளையாட்டில் ஆண்களை சேர்க்க மாட்டேன்” என கருத்து தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் கூட இதுபோன்ற கருத்துக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். உலகத் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்கள் வரை தோல்வியடைந்த ஏஞ்சலா கரினிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Absolutely https://t.co/twccUEOW9e

— Elon Musk (@elonmusk) August 1, 2024

ஒலிம்பிக் கமிட்டியின் விளக்கம்

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியோ இமானே கெலிஃப் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் விளையாட தகுதியானவர் தான் என விளக்கம் அளித்திருக்கிறது. போட்டியாளர்களின் பாஸ்போர்டில் குறிப்பிடப்பட்டுள்ள பாலினம்தான் அதிகாரப்பூர்வமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இமானே கெலிஃப்பின் பாஸ்போர்ட்டில் அவரது பாலினம் பெண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் IOC விளக்கம் அளித்துள்ளது. மேலும், மகளிர் பிரிவில் போட்டிக்கான  தகுதி விதிகளின் அடிப்படையில்தான் பங்கேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று விளையாடிய போட்டியாளர்கள் இருவரும் நீண்ட காலமாக சர்வதேச அளவில் விளையாடி வருவதையும் IOC சுட்டிக்காட்டியது.

குத்துச்சண்டை கூட்டமைப்பு வைத்து குற்றச்சாட்டுகள்

2023 டெல்லி உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இமானே கெலிஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்ட போது, சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு (IBA) தரப்பில் அதன் தலைவர் உமர் கிரெம்லேவ் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில்,”டிஎன்ஏ சோதனைகளின் அடிப்படையில், தங்களை பெண்களாக காட்டி சக போட்டியாளர்களை ஏமாற்ற முயன்ற பல விளையாட்டு வீரர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சோதனை முடிவுகளின்படி, அவர்களுக்கு XY குரோமோசோம்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய விளையாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தார். 

இமானே கெலிஃப் கூறுவது என்ன?

இருப்பினும், அல்ஜிரிய நாடு இந்த குற்றச்சாட்டை மறுத்தது. மேலும், இமானே கெலிஃப் மருத்துவக் காரணங்களால்தான் அவர் தொடரில் இருந்து விலகிவைக்கப்பட்டார் என்றது. ஆனால், மறுபுறம் உயர் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இருந்ததால் இமானே கெலிஃப் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சில அல்ஜிரிய ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டன. அங்கும் சற்று குழப்பம் நீடிக்கிறது எனலாம். 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த சர்ச்சை குறித்து இமானே கெலிஃப்பிடம் முன்னர் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,”அல்ஜீரியா தங்கப் பதக்கம் வெல்வதை விரும்பாத சில நாடுகள் இங்கே உள்ளன. இது ஒரு திட்டமிட்ட சதி. அதுவும் பெரிய சதி, இதுகுறித்து நாங்கள் நிச்சயம் மௌனமாக இருக்க மாட்டோம்” என கருத்து தெரிவித்திருந்தார். எனவே, இந்த சர்ச்சை ஒருபுறம் நடந்து வந்தாலும் குத்துச்சண்டையில் இமானே கெலிஃப் தங்கப் பதக்கம் வெல்வாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பும் இப்போது அதிகரித்துவிட்டது எனலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.