தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாகுபடி முறை, மேம்பட்ட தொழில்நுட்பமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், மக்காச்சோளச் சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டப்பேரவையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தார்.
இத்திட்டத்தின்படி மக்காச்சோளச் சாகுபடியை விவசாயி களிடத்தில் ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலூர், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள் இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை உள்ளடக்கிய 6,000 ரூபாய் மதிப்பிலான 50,000 தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் 50,000 ஹெக்டேரில் மக்காச்சோள சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாடு அரசின் இத்திட்டத்தால் மேற்சொன்ன மாவட்டங்களில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இத்திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “தண்ணீர் வசதி குறைவாக உள்ள புஞ்சை நிலங்களிலும் விவசாயிகள் கேழ்வரகு, உளுந்து, எள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இத்தகைய நிலங்களில் மக்காச்சோளத்தையும் பயிர் செய்ய முடியும். தமிழ்நாடு மற்ற மாவட்டங்களுக்கும் மக்காச்சோளம் விவசாய சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். மக்காச்சோளம் விதைகள், உரங்கள் கிடைக்கப்பெற்றால் குறைவான தண்ணீரைக் கொண்டு நாங்களும் இந்தப் பயிரை விவசாயம் செய்து லாபம் ஈட்ட முடியும். மக்காச்சோளத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கிய உணவுகள், கால்நடை தீவனங்கள் போன்றவற்றை தயாரிக்கும் சிறு தொழில்கள் மேம்படும்” என்றார்கள்.