இம்பால்: மணிப்பூரில் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் மறுவாழ்வு கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல்எழுந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்தாண்டு மே மாதம் இரு தரப்பினர் இடையே இனக் கலவரம் ஏற்பட்டது. இதில் 226 பேர் உயிரிழந்தனர். 11,133 வீடுகள் எரிக்கப்பட்டன. 59,000 பேர் தங்கள் வீடுகளைகாலி செய்து வேறு இடங்களுக்குசென்றுவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் இன்னமும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அகாம்பட் என்ற இடத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கு மறுவாழ்வு அளிக்க கோரியும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரியும் நேற்று பேரணி செல்ல முயன்றனர். இந்தப் போராட்டத்தில் உள்ளூர் மக்களும் சேர்ந்து கொண்டனர்.
சுமார் 100 பேர் பேரணி செல்ல முயன்றபோது, அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். ஆனால், அதையும் மீறி போராட்டக்காரர்கள் 1 கி.மீ தூரத்துக்கு பேரணி சென்றனர்.
உடனடியாக அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிங்ஜமே என்ற இடத்தில் பேரணியை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.
அவர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த மோதலில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர்.
மணிப்பூர் கலவர பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து சட்டப்பேரவையில் நேற்று பேசிய மாநில முதல்வர் பிரேன் சிங்,“மணிப்பூர் விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். சில பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க முடியாது. எதிர்பாராத மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன.
கைது மற்றும் கடும் நடவடிக்கைகள் எடுத்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். மணிப்பூரில் எம்எல்ஏ.,க்கள் உதவியுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறோம். இது தொடர்பான கூட்டங்கள் சில்சரில் நடந்துள்ளன. விரைவில் அமைதி பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பை வெளியிடுவோம்” என்றார்.