மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தால் அனைத்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 05 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்வரை, அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் அவர்; குறிப்பிட்டார்.
தற்போது இஸ்ரேலில் சுமார் 12,000 இற்கும் அதிகமான இலங்கையர்களும், ஜோர்தானில் 15,000 இற்கும் அதிகமானோரும், லெபனானில் சுமார் 7,500 பேரும், எகிப்தில் சுமார் 500 பேரும் பணிபுரிகின்றனர்.
கடல் வழியாகவோ, தரை வழியாகவோ அல்லது எந்த வகையிலும் அவர்களை விரைவில் அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன், அதற்கென தனியான குழு ஜனாதிபதி நியமித்துள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டால், அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கமொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மத்திய கிழக்கில் மோதல்கள் உருவாகுமானால் இலங்கையில் டொலர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் இலங்கைக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அது கிடைக்காவிடின் நாட்டை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும்; என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வெளிநாட்டு தொழிலாளர்கள் இச்சந்தர்ப்பத்தில்; அச்சமடைய வேண்டாம். அவசர முடிவுகளை எடுத்து எல்லைகளை தாண்ட வேண்டாம், பாதுகாப்பாக பணியாற்றுங்கள் என்றும் அமைச்சர் வேண்டுகோள்விடுத்தார்.