போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் (ஏ.எல்.அழகப்பன்) மகனை சலீம் (விஜய் ஆண்டனி) கொலை செய்ததால், அவரைப் பழிவாங்க அவரும் அவரது மனைவி தியாவும் செல்லும் காரின் மீது தாக்குதல் நடத்துகிறார் அமைச்சர். இதில் தியா இறக்க, சலீமின் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. இது ஒரு மழை நாளில் நடப்பதால் ‘மழை பிடிக்காத மனிதனாகி’ விடுகிறார் சலீம்(!).
இந்த நிகழ்வில், அமைச்சரிடமிருந்து சலீமைக் காப்பாற்ற, சலீம் இறந்ததாகப் பொய் சொல்லி, அவரை அந்தமானிலுள்ள ஒரு தீவு நகரில் விட்டுச் செல்கிறார் சலீமின் நண்பரான சீஃப் (சரத்குமார்). அந்தமானில் அடையாளமற்று வாழப் பழகும் சலீமிற்கு, பர்மா (ப்ருத்வி அம்பார்), சௌமியா (மேகா ஆகாஷ்) என்ற இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் அந்நகர தாதாவான டாலியாலும் (டாலி தனஞ்செயன்), காவல்துறை அதிகாரியான சுர்லாவாலும் (முரளி சர்மா) பிரச்னை வர, அதைச் சரி செய்யக் களமிறங்குகிறார். இதனால் அடையாளத்தை மறைத்து வாழும் சலீமிற்கு என்னென்ன பிரச்னைகள் வருகின்றன, அவற்றை எப்படிச் சமாளித்தார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது விஜய் மில்டனின் ‘மழை பிடிக்காத மனிதன்’.
பெரிய அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய் ஆண்டனி, ‘வழக்கமான விஜய் ஆண்டனியாக வழக்கமாக’ வந்து போகிறார். ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் சிறிது மெனக்கெடலைக் காண முடிகிறது. தன் நக்கலான நடிப்பால் சிரிக்கவும், சில இடங்களில் மிரட்டவும் செய்கிறார் முரளி சர்மா. துருதுருவென தொடக்கத்தில் கவனிக்க வைக்கும் ப்ருத்வி அம்பார், சிறிது நேரத்திலேயே தொந்தரவாக மாறுகிறார். தோற்றத்திலும் தொடக்கத்திலும் மட்டும் மிரட்டும் டாலி தனஞ்செயன், பிறகு க்ளைமாக்ஸுக்கு முன்புவரை ‘வந்து போகும்’ வில்லனாகிவிடுகிறார். சரத்குமாரை இன்னுமே பயன்படுத்தி, படத்திற்குப் பலம் சேர்த்திருக்கலாம். டெம்ப்ளட்டான கதாபாத்திரமாக இருந்தாலும் இயக்குநர் ரமணா கொஞ்சம் கவனிக்க வைக்கிறார். மேகா ஆகாஷ், சரண்யா பொன்வன்னன், ஏ.எல்.அழகப்பன் அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள். கௌரவத் தோற்றத்தில் போன் பேச மட்டுமே பயன்பட்டிருக்கிறார் சத்யராஜ்.
புதுமையான முறையில் முயற்சி செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுக்கு விஜய் மில்டனின் ஒளிப்பதிவு சில இடங்களில் மட்டும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது. இதற்கு கே.எல்.பிரவீனின் கட்களும் கைகொடுத்திருக்கின்றன. திரைக்கதையை நகர்த்தும், சில இன்டர்கட் தொகுப்புகளும் ரசிக்க வைக்கின்றன. ஆனாலும், மையக்கதையிலிருந்து விலகி ஓடும் பாடல்களையும், காட்சிகளையும் கண்டிப்புடன் அணுகியிருக்கலாம். அச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஈர்க்கவுமில்லை, படத்தைச் சுவாரஸ்யமாக்கவுமில்லை. பின்னணி இசை சில தருணங்களை மட்டும் விறுவிறுப்பாக்க உதவியிருக்கிறது. சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகியோரின் ஆக்ஷன் காட்சிகளும், இயக்குநரின் புதுமையான திரைமொழியும் சிறிது சுவாரஸ்யத்தைக் கொடுத்து, பின்னர் பெரிதாகச் சோதிக்கவும் செய்கின்றன.
அடையாளத்தை மறைத்து, புதிய ஊரில் வாழும் கதாநாயகன், அங்கே கிடைக்கும் புதிய உறவுகள், அவர்களுக்கு வரும் பிரச்னை, அதற்காகக் களமிறங்கும் கதாநாயகன், படையெடுத்து வரும் பழைய பகை எனப் பழகிய மையக்கதையை, அந்தமான் பின்னணியுடன், புதுமையான ஆக்ஷன் மேக்கிங்குடன் கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். முதற்பாதியில் சில ஆக்ஷன் காட்சிகளும், திரைமொழியும் ஓரளவிற்குக் கைகொடுத்தாலும், சிறிது நேரத்திலேயே அது நீர்த்துப் போய்விடுகிறது. அந்தமான் தீவின் வீடுகள், தெருக்கள், ஊரின் கட்டமைப்புகள் புதிய அனுபவத்தைத் தருகின்றன. அதேநேரம், யூகிக்கும்படியான பெரிய திருப்பங்கள் திரைக்கதையை சுவரஸ்யமற்றதாக்கிவிடுகின்றன. விஜய் ஆண்டனியும் தனியாளாகக் காட்சிகளைக் கரைசேர்க்கத் தவறுகிறார். கதாநாயகனின் பின்னணியும் தெளிவாகயில்லாமல், மர்மமான முறையிலேயே இருப்பது எமோஷனலாகக் கதையிலிருந்து நம்மை விலக வைக்கிறது.
புதுமையில்லாத ஆக்ஷன் கதையில், அந்தமான் பின்னணியையும், புதுமையான ஆக்ஷன் காட்சிகளையும் மட்டும் தொட்டுக்கொண்டு, சுவாரஸ்யமில்லாத திரைக்கதையாலும் மேம்போக்கான கதாபாத்திரங்களாலும், இந்த `படம் பிடிக்காத மனிதனாக’ நம்மை மாற்றியிருக்கிறது இந்த `மழை பிடிக்காத மனிதன்’.