சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது.
மியன்மாருக்கு சட்டவிரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று, மியன்மாரில் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், 89 இலங்கையர்கள் சட்டவிரோதமாக மியன்மாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்தின் உதவியுடன் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, முயற்சியின் மூலம் 40 இலங்கையர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், சைபர் கிரைம் பகுதியில் மேலும் 54 இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மியன்மார் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் எஞ்சியுள்ள கைதிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
எவ்வாறாயினும், இந்த எச்சரிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், சில நபர்கள் சட்டவிரோதமான வழிகளில் வேலைவாய்ப்பிற்காக மியன்மாருக்கு தொடர்ந்து பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, மியன்மாருக்கு தொழில் நிமித்தம் செல்வதை தவிர்க்குமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.
மேலும், இதுபோன்ற ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பாதுகாப்பு அமைச்சு அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.