சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலியாக தமிழக மலைப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நள்ளிரவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், அப்பகுதியில் இருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த சம்பவத்தில் இதுவரை 330-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ராணுவம், பல்வேறு தொண்டு அமைப்புகள், பேரிடர் மீட்புப் படையினர் 4-ஆவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் மழை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தை பொறுத்தவரை, பொள்ளாச்சி, வால்பாறை, நீலகிரி பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது வயநாடு சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மலை கிராமங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக மழை பெய்யும்போது, அப்பகுதிகளை கண்காணித்து உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வனத் துறை, வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி, திண்டுக்கல், கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிகளவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுக்களை தயாராக பாதிக்கப்படும் பகுதிகளில் நிலை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.