வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் மீட்புப்பணிகள் நேற்று மூன்றாவது நாளாகநடைபெற்றது.
சேறும் சகதியுமான இடங்கள்,கட்டிட இடிபாடுகள், மழை உள்ளிட்ட பாதகமாக சூழ்நிலையில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இதில் முண்டக்கை பகுதிபரந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் கூறியதாவது: முண்டக்கை பகுதியில் ராணுவம், கடற்படை, என்டிஆர்எப், போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் என 1,600-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களை தவிர, உள்ளூர்வாசிகளும், உள்ளூர் மீட்புப் பணியாளர்களும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர், காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயராது உழைத்து வருகின்றனர். வழக்கமாக இதுபோன்றஒரு சம்பவம் ஒன்று அல்லது இரண்டு கி.மீ. வரை மட்டுமேநிகழும். ஆனால் முண்டக்கை பகுதியில் பரந்த அளவில் பேரிடர் நிகழ்ந்துள்ளது.
மலப்புரம் மாவட்டம் போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியார் ஆற்றிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த இடம் முண்டக்கையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இது, பேரிடரின் மிகப் பெரிய தாக்கத்தை காட்டுகிறது” என்றார்.
முண்டக்கை பகுதியில் தேயிலை தோட்டத்தில் உள்ள குடியிருப்புகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். அந்த குடியிருப்புகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றார்களா அல்லது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டார்களா என்று தெரியவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.