நியூயார்க்,
இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களால் ஸ்மார்ட்போன் மூலம் விரைவாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடிகிறது என ஐ.நா. பொதுசபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையின் 78-வது அமர்வில் அவர் பேசியதாவது;-
“டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உதாரணமாக, இந்தியாவை எடுத்துக்கொண்டால், கடந்த 5-6 ஆண்டுகளில் வெறும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மூலம் அங்கு சுமார் 80 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
வங்கி அமைப்புடன் ஒருபோதும் தொடர்பில் இல்லாத இந்தியாவின் கிராமப்புற விவசாயிகளால், இப்போது அனைத்து வணிக பரிவர்த்தனைகளையும் தங்கள் ஸ்மார்ட்போனில் செய்ய முடிகிறது. அவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் கட்டணங்களை செலுத்தவும், பணத்தை பெறவும் செய்கிறார்கள்.
இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட அனைவரிடமும் செல்போன் உள்ளது. ஆனால் தெற்கத்திய நாடுகளின் பல பகுதிகளில் நிலைமை அவ்வாறு இல்லை. டிஜிட்டல் மயமாக்கலுக்கான உலகளாவிய கட்டமைப்பில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.