800 மில்லியன் இந்தியர்களை வறுமையில் இருந்து ‘ஸ்மார்ட்போன்கள்’ மீட்டுள்ளது என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருகிறதா? இந்தியாவின் கிராமப்புறங்களில் வங்கி அல்லது பணம் செலுத்துவதற்கான அணுகல் இல்லாத மக்கள் இப்போது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதன் மூலம் பில்களை செலுத்தவும் ஆர்டர்களுக்கான கட்டணங்களைப் பெறவும் முடிகிறது என்று UNGA தலைவர் எடுத்துரைத்தார்.
வறுமையில் இருந்து மீட்பு
800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
எளிதான பணப்பரிமாற்றம்
இந்தியாவின் கிராமப்புறங்களில் வங்கியோ, பணம் செலுத்துவதற்கான அணுகலோ இல்லாத மக்கள் இப்போது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதன் மூலம் வறுமையில் இருந்து வெளிபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அதாவது பில்களைச் செலுத்தவும் ஆர்டர்களுக்கான கட்டணங்களைப் பெறுவதையும் சாத்தியமாக்கிய ஸ்மார்ட்போன் மற்றும் இணையவசதியே இதற்கு காரணம் என்று பிரான்சிஸ் தெரிவித்தார்.
டிஜிட்டல்மயமாக்கல்
“டிஜிட்டல் மயமாக்கல், கடந்த 5-6 ஆண்டுகளில் 800 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து வெளியில் கொண்டுவந்துள்ளது. அதிலும், வெறும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டினால் மட்டுமே மக்களை வறுமையிலிருந்து மீட்க முடிந்தது,” என அவர் தெரிவித்தார்.
தொலைதூரப்பகுதிகளில் இணைய வசதி
இந்தியாவின் தொலைதூரப் பகுதிகள் கூட இணைய வசதி மேம்பட்டிருப்பதும், ஸ்மார்ட்போன்கள் அணுகக்கூடிய விலையில் கிடைப்பதும் வறுமையில் இருந்து மக்களை மீட்க உதவியிருக்கிறது. இதை சுட்டிக்காட்டிய ஐநா அமைப்பின் தலைவர், இந்தியாவைப் போலவே பிற தெற்கத்திய நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கலைத் தழுவினால், மக்களை வறுமையில் இருந்து மீட்கலாம் என்று தெரிவித்தார்..
வங்கி அமைப்பு
இந்தியாவில் உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு, போதுமான அளவு வங்கி அமைப்புடன் தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில், இப்போது அவர்கள் தங்களுடைய அனைத்து வணிகங்களையும் ஸ்மார்ட்போனில் பரிவர்த்தனை செய்ய முடியும் அளவிற்கு கட்டமைப்பு இந்தியாவில் உருவாகியிருக்கிறது. ஸ்மார்ட்போன் மூலமாகவே தங்கள் பில்களை செலுத்துகிறார்கள். இதனால் நேரமும் அலைச்சலும் மிச்சமாகிறது. அதேபோல, ஸ்மார்போனில் ஆர்டர்களைப் பெற்று அதற்கான கட்டணங்களையும் பெற முடிவது நல்ல விஷயமாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள இணையக் கட்டமைப்பு, உலகின் பல நாடுகள் இல்லை என்பதால், டிஜிட்டல்மயமாக்குவதன் முக்கியத்துவத்தை, இந்தியாவைப் பார்த்து பிற நாடுகள் கற்றுக் கொள்ள முடியும் என்று ஐநா தலைவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் டிஜிட்டல் அதிகரிக்கும் பணப்பரிவர்த்தனை
தற்போது மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை ஏற்றம் கண்டுள்ளது. மோடி தனது முதல் ஆட்சிக்காலத்தில், 2016ல் மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (யுபிஐ) எழுச்சி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பெருமளவில் பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை அளவு 45 சதவீதம் வளர்ச்சியடைந்து 14.44 பில்லியனை எட்டியுள்ளது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் நேற்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது, . பரிவர்த்தனைகளின் மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் அதிகரித்து, மொத்தம் ரூ.20.64 டிரில்லியன் என்ற அளவில் உயர்ந்துள்ளது..