தனது டிரேட்மார்க் பீல் குட் காமெடி டிராமா ஜானரிலேயே இந்த `சட்னி சாம்பார்’ வெப் சீரிஸை எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன்.
ஊட்டியில் ‘அமுதா கஃபே’ என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தி வருகிறார் ரத்னசாமி (நிழல்கள் ரவி). திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கேன்சரால் மோசமான உடல்நிலையில் இருக்கிறார். அந்தச் சமயத்தில் தனது மகனான கார்த்திக்கிடம் (கயல் சந்திரன்) ஒரு கோரிக்கை வைக்கிறார்.
தான் திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணுடன் ‘லிவ் இன்’ உறவில் இருந்ததாகவும் அதன் மூலம் தனக்கு இன்னொரு மகன் இருக்கிறார் எனவும் உண்மையை கூறி தன்னுடைய மற்றொரு மகனைச் சந்திப்பதற்கு கார்த்திக்கிடம் கோரிக்கை வைக்கிறார் ரத்னசாமி. அந்த மகன் யார், அந்த மகனால் ஏற்படும் திருப்பங்கள் என்னென்ன என்பதுதான் இந்த பீல் குட் வெப் சீரிஸின் கதை.
நாயகனாக யோகி பாபு வழக்கம்போல தனது கேஷுவல் நடிப்பை வெளிப்படுத்தி சிரிக்க வைக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வாணி போஜன் எமோஷனல் காட்சிகளில் கைதட்ட வைக்கிறார். ‘தண்ணி கேன் போட வந்தேன் ப்ரோ’ என்ற பாணியில் பயணிக்கும் ஹீரோயினாக இல்லாமல் படத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்த விஷயம் ஆறுதலைக் கொடுக்கிறது. இது மாதிரியான முக்கிய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுத்து இந்த சட்னிக்கும் சாம்பாருக்கும் சுவையை கூட்டுகிறார் வாணி போஜன்.
பொறுப்பான மகன் கதாபாத்திரத்தில் டீசன்ட் நடிப்பை வழங்கியிருக்கிறார் கயல் சந்திரன். பதற்றத்தையும் அழுத்தத்தையும் காமெடியுடன் வெளிப்படுத்தி சிரிக்க வைக்கும் முக்கிய என்டர்டெயினராக வலம் வருகிறார் நிதின் சத்யா. இவருக்கு மனைவியாக வரும் மைனா நந்தினியும் ஆறுதலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரங்களில் தோன்றியிருக்கும் இளங்கோ குமரவேலும் சார்லியும் நடிப்பில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார்கள். குறிப்பாக சார்லி எமோஷனல் காட்சிகளில் மனதை உலுக்குகிறார்.
தனது வழக்கமான பீல் குட் காமெடிகளை ருசிக்காக டஜன் கணக்கில் சேர்த்திருக்கிறார் ராதா மோகன். (உபயம் – வசனகர்த்தா பொன் பார்த்திபன்). இது பல இடங்களில் ருசிகரமான விருந்தாக அமைந்திருக்கிறது. அதே சமயம், சில இடங்களில் திகட்டவும் வைக்கிறது. திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் செயல்களை இன்னும் கொஞ்சம் கவனித்து செழுமைப்படுத்தியிருக்கலாம்.
அதே போல எமோஷனல் காட்சிகளையும் சரியான இடத்தில் சேர்த்திருந்தால் அந்த காட்சிகள் இன்னும் கொஞ்சம் ஆழமான தாக்கத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். சீரியஸாக ஒரு காட்சி வந்த பின்னர், அதன் தாக்கம் நம்மை வந்து சேரும் முன்பாகவே அதையே வைத்து ஒரு காமெடியும் செய்துவிடுவதால் எதுவுமே மனத்தில் நிற்காமல் போய்விடுகிறது. சில பிளாஷ்பேக்குகள் பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கிறது. ஆனால், அது சிறிது நேரத்திலேயே காட்சிகள் ஏதுமின்றி படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கும் பரிச்சயமாகும் விஷயம்… ‘அதெப்படி திமிங்கலம்!’ என நம்மை ஆழ்ந்து யோசிக்க வைத்துவிடுகிறது.
சில பீல் குட் வசனங்கள் புதிய சில புரிதல்களைக் கொடுத்து ‘குட்’ டிக் அடிக்க வைக்கின்றன. ஆனால், இதற்கிடையில் சில உருவகேலி வசனங்களை சொருகியது ‘பேட் ஹாபிட்!’. ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான்’ என்ற பழமொழியை போல உருவகேலி வசனங்களையும் பேசிவிட்டு… ‘Don’t underestimate you!’ என உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மைக்கு பதிலடியாக இந்த வசனத்தையும் பேசுகிறார்கள்.
மலைகள் சுற்றியுள்ள ஊட்டியையும் அதன் நிலபரப்பையும், அதன் குளிரையும் தன்மை மாறாத லைட்டிங்கில் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். என்டர்டெயின்மென்ட் ஆர்க் சற்றே சரிவைச் சந்திக்கும்போது தனது ராஜ தந்திரங்களை படத்தொகுப்பாளர் ஜிஜேந்திரன் காட்டியிருக்கலாம். பீல் குட் காட்சிகளுக்கேற்ற பீல் குட் இசை இல்லாதது ஏமாற்றமான ஒன்றே!
கமகமவென மணக்க வேண்டும் என எண்ணி படக்குழு பல சேர்மானங்களைச் சேர்த்து முயற்சி செய்திருக்கிறது. ஆனால் சரியான மெயின்டிஷ் இல்லாதது மட்டுமே இந்த ‘சட்னி சாம்பார்’-இன் குறை!