Doctor Vikatan: என் வயது 46. நான் என்னுடைய சர்க்கரை அளவை சுயமாகப் பரிசோதனை செய்து கொண்டதில் சாப்பாட்டுக்கு முன் 72, சாப்பாட்டுக்குப் பின் 98 என்று வந்தது. இது சரியான அளவா? இந்திய சூழலுக்கான சர்க்கரை அளவு சர்வதேச பட்டியலுக்கு மாறுபட்டது என்பது உண்மையா?
-சோமசுந்தரம், மதுரை, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயந்த் லியோ.
நீங்கள் குறிப்பிட்டுள்ள 72 மற்றும் 98 இரண்டுமே நார்மலான அளவுகள்தான். சுயமாகப் பரிசோதனை செய்து பார்த்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வீட்டிலேயே குளுக்கோமீட்டர் (Glucometer) வைத்து டெஸ்ட் செய்துகொண்டதாக நான் புரிந்துகொள்கிறேன்.
உங்களுக்கு ஏற்கெனவே நீரிழிவு பாதிப்பு உள்ளதா அல்லது நான்டயாபட்டிக் (non-diabetic ) நபரா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், ரத்தச் சர்க்கரையின் சரியான அளவைத் தெரிந்துகொள்வதற்கும் ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். அதாவது நரம்பிலிருந்து ரத்தத்தை எடுத்து, தரமான லேபில் கொடுத்துப் பரிசோதித்துப் பார்ப்பதுதான் சரியானது. அதில்தான் ரத்தச் சர்க்கரை அளவை துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.
குளுக்கோமீட்டர் வைத்து வீட்டிலேயே நீங்கள் செய்து பார்ப்பது என்பது CBG எனப்படுகிற முறை. அதாவது சிபிஜி என்று சொல்லக்கூடிய ‘கேபிலரி பிளட் குளுக்கோஸ் (Capillary Blood Glucose) டெஸ்ட்டில் விரல் நுனியில் வரக்கூடிய ரத்தத்தை எடுத்துப் பார்ப்போம். இதை வைத்து உங்கள் ரத்தச் சர்க்கரை அளவை தோராயமாக நீங்கள் தெரிந்துகொள்ளலாம், அவ்வளவுதான்.
நீரிழிவுக்கான ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பொறுத்தவரை இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உடல் பருமன் தொடர்பான பிரச்னைகளில்தான் ஆசிய மக்களுக்கும் பிற நாட்டினருக்கும் அளவுகோல் மாறுபடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.