ஆசையாய் கட்டிய வீடு, வாங்கிய வாகனங்கள், சேர்த்துவைத்த பணம், நகை என எது போனாலும் உறவுகள் அருகிலிருந்தால் இழந்த எதையும் மீண்டும் பெற்றுவிடலாம் என்பதே ஒவ்வொருவரின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை சுக்கு நூறாய் உடைத்து நூற்றுக்கணக்கானவர்களைக் குடும்பங்களின்றி நிற்கதியாய் நிற்கவைத்திருக்கிறது வயநாடு நிலச்சரிவு.
இதுவரையில், மட்டும் 300-க்கும் மேற்பட்டோரின் உயிர்களை இந்த இயற்கை பேரழிவு பறித்திருக்கிறது. காணாமல் போனவர்கள் பலரை மீட்புக் குழுவினர் தேடிவரும் நிலையில் இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முடிந்த அளவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு, மருத்துவ முதலுதவி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டிசம்பரில் திருமணத்துக்குக்கு திட்டமிடப்பட்டிருந்த ஸ்ருதி என்ற இளம்பெண் ஒருவர் தனது தாய், தந்தை, சகோதரி என முழு குடும்பத்தையும் இழந்து, நிலச்சரிவால் சீரழிந்த காட்டில் மிஞ்சியிருக்கும் ஒத்த மரமாய் கலங்கி நிற்பது பலரின் மனதைக் கனக்க வைத்திருக்கிறது. ஆறு வாரங்களுக்கு முன்பு புதிதாகக் குடியேறிய வீடு தற்போது நிலச்சரிவில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் தரைமட்டமாகலாம் என்ற அளவுக்கு விழும் நிலையில் இருக்கிறது.
மகளின் திருமணத்துக்காக குடும்பத்தினர் சேர்த்துவைத்த நான்கரை லட்ச ரூபாய் பணம், 15 சவரன் நகைகள் மொத்தமும் மண்ணில் எங்கேயோ புதைந்துவிட்டது. இறுதியாக, ஸ்ருதியின் தந்தை சிவண்ணன், தாய் சபிதா, சகோதரி ஸ்ரேயா ஆகியோரையும் நிலச்சரிவு உள்ளிழுத்துக் கொண்டது. சகோதரி ஸ்ரேயாவின் உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கோழிக்கோட்டில் MIMS மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்ருதி நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் உறவினர் வீட்டிலிருந்ததால் இந்த இயற்கை பேரழிவிலிருந்து தப்பித்தார்.
கட்டப்பனாவிலுள்ள NMSM அரசு கல்லூரியில் கனவுகளுடன் பட்டப்படிப்பு படித்துவந்த சகோதரிக்கு தற்போது இறுதிச் சடங்குகள் முடித்துவிட்டு அழுதழுது கண்ணீர் வறண்டு கலங்கி நிற்கிறார் ஸ்ருதி. வயநாடு நிலச்சரிவின் கோர முகத்தில் ஸ்ருதி போன்று உறவுகளை இழந்து தவிப்போரின் கண்ணீர்த் துளிகள் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. அத்தகையவர்களின் வாழ்வில் இயற்கை பேரிடர் ஏற்படுத்திய வெற்றிடத்தை முடிந்தவரை ஆதரவுக்கரம் நீட்டி நிரப்புவோம்!
NEWS & PHOTO CREDIT – ONMANORAMA
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88