இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது, இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயார் நிலையில் உள்ளனர். சமீபத்தில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் மற்றும் புதிய விதிகள் தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒரு சில அணிகள் 6 முதல் 7 வீரர்களை தக்க வைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், ஒரு சில அணிகள் 2 முதல் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டனான தோனி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு சீசன் அவர் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்த பின்பு தான் தோனி விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும். ஒரு அணி நான்கு வீரர்களுக்கு மேல் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்தால், தோனி நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை தோனி பங்கேற்க முடியாத விட்டால் சிஎஸ்கே அணி ஏலத்தில் மூன்று இந்திய விக்கெட் கீப்பர்களை குறி வைக்கும். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.
கேஎல் ராகுல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் குறிவைக்கும் வீரர்களில் ஒருவர் KL ராகுல். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கலக்கும் ராகுல் 56 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் செய்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து இருந்தார். எனவே வரவிருக்கும் ஏலத்தில் அவர் ஏலத்திற்கு வந்தால் சிஎஸ்கே அவரை நிச்சயம் குறி வைக்கும். தற்போது LSG கேப்டனாக இருக்கும் ராகுலுக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டை காரணமாக அவர் தக்கவைக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுல் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் சென்னை அணியை தவிர, ஆர்சிபி அவரை ஏலத்தில் எடுக்க போட்டி போடும். ஐபிஎல் 2025 ஏலத்தில் கேஎல் ராகுலுக்காக சிஎஸ்கே எவ்வளவு தொகையை செலவழிக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரிஷப் பந்த்
விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பந்த் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்திய அணியில் இருந்தும், ஐபிஎல்லில் இருந்தும் பந்தை விலக்கி வைக்க முடியாது. டெல்லி அணியின் கேப்டனாக இருக்கும் பந்த் அணியை விட்டு வெளியேற உள்ளார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அவர் ஏலத்தில் வந்தால் நிச்சயம் சென்னை அணி அவரை குறிவைக்கும். அடுத்த ஐபிஎல்லில் எம்எஸ் தோனி சென்னை அணியின் பயிற்சியாளராக மாறி, விக்கெட் கீப்பராக பந்த் இருந்தால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.
இஷான் கிஷன்
2023 ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இஷான் கிஷனுக்கு ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தற்போது வரை இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் அவர் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இந்நிலையில் மும்பை அணி அவரை தக்க வைத்து கொள்ளும் வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே, அவர் ஏலத்தில் வந்தால் நிச்சயம் சென்னை அணி அவரை குறிவைக்கும். மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் உள்ளதால் இஷான் கிஷனை தக்க வைக்கும் வாய்ப்பு மிக குறைவு. 100க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 99 கேட்சுகள் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும் பேட்டிங்கிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க முடியும்.