தூத்துக்குடி: “சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை மறைக்க தமிழக அமைச்சர்கள் எதையாவது பேசுகின்றனர்” என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கடவுள் ராமர் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அமைச்சர் ஒரு மாதிரி பேசுகின்றனர். சோழ சாம்ராஜ்யம் பகுத்தறிவால் உருவானது அல்ல. சோழ சாம்ராஜ்யம் என்பது இந்து நம்பிக்கைகள், இந்து பரவல்கள், இந்து கோயில்களை எழுப்பிய பேரரசு. அதுகூட தெரியாமல் ஏதோ பேச வேண்டுமென இந்த நாட்டு மக்களின் நெஞ்சம் நிறைந்திருக்கும் ராமபிரானை தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது கண்டித்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் இந்து தர்மத்தை, இந்து மதத்தை அழிக்க வேண்டுமென பேசினார். தொடர்ந்து இப்படி எதையாவது பேசி, தமிழகத்தில் உள்ள சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மடைமாற்றி, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவே இல்லை என்பது போல் பரபரப்பாக பேசி வருகின்றனர். இங்கு உள்ள அமைச்சர்கள் நிர்வாகத்தை கவனிக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் கூலிப்படைகளால் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. திமுக அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை. சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்ட இந்த அரசு இனியும் இருந்து பிரயோஜனமில்லை என்பதை தான் சொல்கிறோம். இந்த அரசு தனது தார்மிக கடமையை, உரிமையை இழந்துவிட்டது.
தூத்துக்குடியை பொறுத்தவரை மத்திய அரசு துறைமுகம், விமான நிலையம், சாலை வசதி உள்ளிட்ட எத்தனையே பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்தும் கூட, இங்குள்ள திராவிட மாடல் அரசு தொழில் ரீதியான முன்னேற்றங்களை, முதலீடுகளை கொண்டு வருவதற்கு முடியவில்லை. பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய போகிறார்கள் என்று சொல்லியும், இதுவரை எந்த முதலீடும் வரவில்லை.
எப்படியாவது சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என இனிமேல் முதலமைச்சரிடம் கேட்க முடியாது. சீரழிந்தது சீரழிந்தது தான். உங்களால் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியவில்லையென்றால், நீங்களாகவே அதனை விட்டு கீழே இறங்கி விடுவது உத்தமம். இதேபோல், அமைச்சர் பொன்முடி கல்லூரி விழாவில் பேராசிரியரை ஒருமையில் பேசி உள்ளார். இது கண்ணியமில்லாத, கட்டுப்பாடு இல்லாத திமுகவாக சென்று கொண்டுள்ளது. அவர் பேராசிரியரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
தேசிய பேரிடர் என்று சுனாமி காலத்தில் கூட அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு நிகராக பேரிடராக ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக மத்திய அரசு கேரள மாநிலத்துக்கு தேசிய நிவாரண படகுகளை அங்கு அனுப்பி உள்ளது. ராணுவம் அங்கு விரைந்துள்ளது. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். மக்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடராக அறிவிக்க சில விதிகள், சட்டங்கள் உள்ளன. இன்றைக்கு மின் துறையில் தமிழகம் மிகப் பெரிய மாற்றத்தை அடைந்திருக்கிறது என்றால் அதற்கு மத்திய அரசும், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் தான் காரணம்” என்று கூறினார்.
பின்னணி என்ன? – முன்னதாக, அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சோழ மன்னர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர்கள் கட்டிய கோயில், வெட்டிய குளங்கள், சிற்பங்கள் இருப்பதாகவும், ஆனால், ராமர் வாழ்ந்ததற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், ராமர் என்ற ஒருவருக்கு வரலாறே கிடையாது எனக்கூறிய சிவசங்கர், இந்த மண்ணில் பிறந்தவர்களை நாம் கொண்டாடாவிட்டால் எதற்கும் தொடர்பில்லாதவர்களை நம் தலையில் கட்டி விடுவார்கள் எனவும் பேசியிருந்தார். அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்,
அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் அவர், “ பகவான் ஸ்ரீ ராமர் மீது திமுகவினருக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. ஸ்ரீராமர் சமூக நீதியின் போராளி என்றும், அனைவருக்கும் சமத்துவத்தை போதித்தவர் அவர்தான் என்றும் திமுக அமைச்சர் ரகுபதி சில நாட்களுக்கு முன்பு கூறினார்.
ஆனால், தற்போது ஊழல்மிக்க அமைச்சர் சிவசங்கர், ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோலை நிறுவியபோது அதனை எதிர்த்தவர்கள் தான் திமுகவினர். ராமரின் வரலாறு பற்றி அமைச்சர் ரகுபதியிடம், சிவசங்கர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இரு அமைச்சர்களும் கலந்தாலோசித்து ராமர் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். இதன்மூலம் பகவான் ஸ்ரீ ராமரிடம் இருந்து பல விஷயங்களை சிவசங்கர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்” என்று அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.