புதுடெல்லி: “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த வாரம் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வேன்” என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முன்னதாக, அதிபர் ஜோ பைடனின் வயது, உடல்நலம் ஆகியவை விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார். ஒபமா உள்ளிட்ட தலைவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வேன். இந்தப் பிரச்சாரத்தில் நாம் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.