கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த சில பெண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் விபச்சார தடுப்பு பிரிவில் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதில், `துபாயில் வீட்டு வேலை செய்யவும், நட்சத்திர ஹோட்டல்களில் நடனமாடவும் இளம்பெண்கள் வேலைக்குத் தேவை என வாட்ஸ்அப் பில் ஒரு விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தில் மாதச் சம்பளம் 50,000 ரூபாயும் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த நாங்கள் விளம்பரத்திலிருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டோம். எதிர்முனையில் பேசிய ஏஜென்ட் ஒருவர், எங்களின் கல்வி தகுதி உள்ளிட்ட சுய விவரங்கள், குடும்ப சூழல்கள் குறித்து விசாரித்தார்.
பின்னர் போட்டோவுடன் கூடிய பயோ டேட்டா, பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பும்படி எங்களிடம் தெரிவித்தார். அதன்படி நாங்கள் எங்களின் முழு விவரங்கள், போட்டோவுடன் கூடிய பயோ டேட்டாவை அனுப்பி வைத்தோம். அதன்பிறகு எங்களை இன்டர்வியூக்காக சென்னைக்கு வரும்படி கூறினார். இதையடுத்து நாங்கள் ஏழு பேர் சென்னை வந்தோம்.
இன்டர்வியூவில் `உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா என கேள்வி கேட்டதோடு டான்ஸ் ஆடவும் கூறினார்கள். நாங்கள் டான்ஸ் ஆடியபிறகு எங்களை வேலைக்கு செலக்ட் செய்தார்கள். இன்டர்வியூ முடிந்த பிறகு துபாயில் வேலை, அதற்கான பயண ஏற்பாடுகளை செய்துவிட்டு தகவல் சொல்கிறோம் என கூறி எங்களை அனுப்பினார்கள். இதையடுத்து மீண்டும் எங்களை போனில் தொடர்பு கொண்டு துபாய்க்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு துபாய்க்கு செல்லலாம் என்று கூறினர். அதனால் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் நாங்கள் இருந்தோம். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு எங்களிடம் தனித்தனியாக ஒப்பந்தத்தில் கையெழுத்தை வாங்கிவிட்டு துபாய்க்கு விமானத்தில் அனுப்பி வைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தில் ஓராண்டு துபாயில் நடனமாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. துபாய்க்கு சென்ற எங்களை அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த சில டான்ஸர்கள், எங்களுக்கு எப்படி நடனமாட வேண்டும் என கற்றுக் கொடுத்தனர். அப்போது எங்களுக்கு கவர்ச்சியான டிரஸ்களைக் கொடுத்து அணியும்படி வற்புறுத்தினார்கள். அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தோம். அதற்கு ஹோட்டல் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர், நீங்கள் எல்லா கண்டிஷனுக்கும் சம்மதித்துதான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டீருக்கிறீர்கள். அதனால் கண்டிப்பாக நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கதான் வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசினர். வேறு நாடு, மொழி பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் கொடுத்த அந்த ஆடைகளை அணிந்து நடனமாடினோம். அதன்பிறகுதான் அந்தக் கொடுமை எங்களுக்கு நடந்தது. ஹோட்டலில் ஒரு பக்கத்தில் டான்ஸ் நடந்துக் கொண்டிருக்கும்போதே எங்களில் சிலரை தனியாக அழைத்துச் சென்று ஒர் அறைக்குள் செல்லும்படி கூறினார்கள். அங்கு எங்களை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தினார்கள். அதற்கு நாங்கள் மறுத்தால் சரமாரியாக அடித்து துன்புறுத்தியதோடு ஓய்வே இல்லாமல் டான்ஸ் ஆட வைத்து கொடுமைப்படுத்தினார்கள்.
பாலியல் தொழிலில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும். அதனால் நாங்கள் பல்வேறு கொடுமைகளை துபாயில் அனுபவித்து வந்தோம். இந்தச் சூழலில்தான் எங்களின் கொடுமைகளை ஒரு சிலர் மூலம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி அங்கிருந்து தமிழகத்துக்கு திரும்பினோம். வேலைக்காக அழைத்துச் சென்று எங்களை பாலியல் தொழிலில் தள்ளியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த தகவலின்படி சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் (24), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆபியா (24), தென்காசி மாவட்டம் இலஞ்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் (40) பேரை கடந்த 30.5.2024-ல் போலீஸார் பிடித்து விசாரித்தனர். இவர்கள் வெளிநாட்டு வேலை என்ற பெயரில் இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி பாலியல் தொழிலுக்கு தள்ளிய ஏஜென்ட்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து செல்போன்கள், விளம்பர நோட்டீஸ்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஏஜென்ட்கள் அளித்த தகவலின்படி துபாயில் உள்ள சம்பந்தப்பட்ட ஹோட்டலின் உரிமையாளர் முஸ்தபா என்கிற ஷகில் எனத் தெரியவந்தது.
இவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர். இவர்தான் இந்த பாலியல் தொழில் கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டுள்ளார். தமிழகத்திலிருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்படும் இளம்பெண்களுக்கு குறிப்பிட்ட தொகையை முஸ்தபா, ஏஜெண்டுகளுக்கு கொடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனால் துபாயில் உள்ள முஸ்தபாவைப் பிடிக்க சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக விமான நிலையங்களுக்கு முஸ்தபா குறித்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கொடுத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்க முன்பு துபாயிலிருந்து கேரளாவுக்கு வந்த முஸ்தபாவை விமான நிலைய அதிகாரிகள் பிடித்து சென்னை போலீஸாரிடம் ஓப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், “கேரளாவைச் சேர்ந்த முஸ்தபா, கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன்மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார். இவர்களுக்கு ஏஜென்ட்கள் தமிழகம், கேரளாவில் உள்ளனர். அவர்கள் மூலம்தான் வெளிநாட்டு வேலை, கைநிறைய சம்பளம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து இளம்பெண்கள், அதிலும் அழகான இளம்பெண்களை தேர்வு செய்து இந்தப் பாலியல் தொழிலில் தள்ளி வந்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக இன்னும் சிலர் உள்ளனர். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த வழக்கில் கைதான ஏஜென்ட்கள், முஸ்தபா உள்ளிட்டோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் அடைத்துள்ளோம். இந்தக் கும்பலின் பிடியில் சில துணை நடிகைகளும் சிக்கியிருக்கிறார்கள்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88