புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் என 6 மாநிலங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ. சூழலியல் பாதுகாப்பு பகுதி ( Ecologically Sensitive Area – ESA) என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இன்னும் 200-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. 5-வது நாளாக இன்று (சனிக்கிழமையும்) மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில், கேரளாவில் 9,994 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு நடந்த அடுத்த நாள் வெளியிடப்பட்டுள்ளதோடு அதன்மீது மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அடுத்த 60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கையில் குஜராத்தின் 449 சதுர கிலோமீட்டர், மகாராஷ்டிராவில் 17,340 சதுர கிலோமீட்டர், கோவாவின் 1,461 சதுர கிலோ மீட்டர், கர்நாடகாவின் 20,668 சதுர கீலோமீட்டர், தமிழ்நாட்டின் 6,914 சதுர கிலோமீட்டர், கேரளாவின் 9,993.7 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 56,800 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் வனத்துறை டிஜிபி சஞ்சய் குமார் தலைமயில் 5 பேர் கொண்ட குழு மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியின் நிமித்தமாக இந்த வரைவு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசால், 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் குழு, அதே ஆண்டில் அக்டோபர் மாதம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டது. இந்தக் குழுவானது வரும் செப்டம்பர் மாதம் தனது பரிந்துரைகள் கொண்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளானது யுனஸ்கோவின் சர்வதேச பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. மேலும் இவை உலகின் மிகவும் பிரதானமான பல்லுயிர் பரவல் கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
வரைவு அறிக்கையின் பரிந்துரைகள்.. சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுரங்கம் தோண்டுதல், குவாரி அமைத்தல், மணல் அள்ளுதல் ஆகியனவற்றிக்கு முழுமையாக தடை விதிக்க வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கெனவே இயங்கும் சுரங்கங்கள் குத்தகை காலாவதியாகும் நாளில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மூடவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் வரைவு அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பெரிய அளவிலான கட்டுமானங்களுக்கு தடை, புதிய நீர்நிலைகள் அமைக்கத் தடை என பல்வேறு பரிந்துரைகளை வகுத்துள்ளது. இருப்பினும் குடியிருப்புகள் அமைக்க தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் குழு சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கான பாதுகாப்பு பரிந்துரைகள் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மாதவ் காட்கில் அறிக்கையும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பாதுகாப்பு அறிக்கையை வெளியிட்டது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் பரிந்துரைகள் பின்பற்றப்பட்டிருந்தால் நிச்சயமாக இந்த பேரிடர் ஏற்பட்டிருக்காது என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் தான் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான 6-வது வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.