ஜாம்ஷெட்பூர்: வங்கதேசத்தவர்களின் ஊடுருவல் காரணமாக ஜார்க்கண்டின் மக்கள் தொகை கட்டமைப்பு வேகமாக மாறுவதாகவும், வாக்கு வங்கி காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு அமைதி காக்கிறது என்றும் பாஜக மூத்த தலைவரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் ஜார்க்கண்ட் தேர்தல் இணை பொறுப்பாளரான ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜாம்ஷெட்பூரில் தொண்டர்கள் மத்தியில் நேற்று (ஆக. 2) உரையாற்றினார். அப்போது அவர், “அசாம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவிற்கு அடுத்து ஜார்க்கண்டின் மக்கள் தொகை கட்டமைப்பு வேகமாக மாறி வருகிறது. வங்கதேசத்தவர்கள் அதிக அளவில் ஜார்க்கண்டில் குடியேறி வருகிறார்கள்.
இதனால், ஜார்க்கண்ட்டின் 20 சட்டமன்றத் தொகுதிகளில் ஊடுருவல்காரர்களின் சதவீதம் 20%ல் இருந்து 48% ஆக உயர்ந்துள்ளது. வாக்கு வங்கி காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான மாநில அரசு இவ்விஷயத்தில் அமைதி காத்து வருகிறது.
ஊடுருவலைத் தடுப்பது மத்திய அரசின் பொறுப்பு மட்டுமல்ல. அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது. மாநிலத்தின் சந்தால் பர்கானா பகுதியில் வங்கதேச ஊடுருவல் உச்சத்தில் உள்ளது. அவர்கள் ஆதிவாசிகள் மற்றும் பட்டியலினத்தவர்களின் நிலங்களை அபகரித்து அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்தப் போக்கு தொடர்ந்தால், ஊடுருவல்காரர்கள் சட்டசபைகளில் அமரும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. ஜார்கண்டின் புகழ்பெற்ற கலாச்சாரம், பாரம்பரியம், அதன் ஆறுகள், காடுகள் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே.” என்று தெரிவித்தார்.