சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்து தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிலச்சரிவு விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரணை நடத்தியது. அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்நிலையில் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம் கோட்டையம், இடுக்கி, வயநாடு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரி தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர்கள், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகள் மற்றும் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள், இதுபோன்ற விபத்துகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க எடுக்க இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கம், குவாரிகள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் குறித்த விவரங்களும் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.
வயநாடு நிலச்சரிவு விபத்தைஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்.9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.