திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினரும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியின் குகையில் சிலர் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கல்பெட்டா ரேஞ்ச் வன அதிகாரி கே.ஹாஷிஸ் தலைமையிலான 4 பேர் துணிச்சலாக மலை உச்சிக்கு சென்று அங்கிருந்த 4 குழந்தைகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர். அவர்கள் பனியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “வனத்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் போராடி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மலை உச்சியில் சிக்கியிருந்த 6 பேரை காப்பாற்றி உள்ளனர். வனத் துறை அதிகாரிகளின் துணிச்சல் மிக்க செயல், பிரச்சினைகளைசமாளிக்கும் கேரளாவின் உறுதிப்பாட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது. நம்பிக்கையுடன் ஒன்றுபடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஹாஷிஸ் கூறும்போது, “பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் கிடைக்கும் பொருட்களை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர். மேலும் இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதையும் தவிர்த்து வருகின்றனர். எனினும், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரின்போது உணவுப்பொருள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
அந்த வகையில் குழந்தைகளின் தாய் உணவு தேடிக் கொண்டிருந்தபோதுதான் எங்கள் கண்ணில் பட்டார். இதையடுத்து அங்கு சென்றபோது 6 பேர் இருந்தனர். பின்னர் எங்களுடன் வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினோம். இதற்கு குழந்தைகளின் தந்தை சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகளை எங்கள் முதுகில் கயிறு மூலம் கட்டிக் கொண்டு மலையில் இருந்து இறங்கினோம். பெற்றோரும் எங்களுடன் இறங்கி வந்தனர்” என்றார்.