“நல்லது செய்தால் சிறை” என்னும் வித்தியாசமான உலகத்தில் ஒரு யோக்கியனுக்கு அயோக்கியர்களால் என்ன நடக்கிறது என்பதே ‘வாஸ்கோடகாமா’ படத்தின் ஒன்லைன்.
ஊரில் வழிப்பறி செய்தவர்களைத் தடுத்ததற்காக காவல்துறையால் சிறை வைக்கப்படுகிறார் நாயகன் வாசுதேவன் (நகுல்). அவரை எப்படியாவது வெளியே கொண்டுவரவேண்டும் என லஞ்சம் கொடுத்து மீட்கிறார் அவரது அண்ணன் மகாதேவன் (பிரேம் குமார்). அந்த ஊரிலிருக்கும் பலரும் வாசுதேவன் நிறைய நல்லது செய்வதாக அவரது அண்ணனிடம் புகார் கூறுகிறார்கள். அதனால் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்படுகிறது. இந்நிலையில் விரலில் ஏற்படும் சிறு காயத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மகாதேவன் திடீரென மரணிக்கிறார்.
அடுத்து என்ன என்று தெரியாமல் மாநகரத்தில் இருக்கும் சித்தப்பாவின் (முனீஸ்காந்த்) ‘அயோக்கிய வாசிகள் குடியிருப்பு’க்கு செல்லும் வாசுதேவன், அங்கே வீடு தேடி அலைகிறார். அவர் நல்லவர் என்பதால் அவருக்கு வீடு தர அனைவரும் மறுக்கிறார்கள். இப்படி நன்மை தீமையாகவும், தீமை நன்மையாகவும் இருக்கும் உலகத்தில் வாசுதேவனுக்கு அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதை ஃபேன்டஸியாகச் சொல்கிறது ‘வாஸ்கோடகாமா’ (“ஒரே குழப்பமா இருக்குல்ல” என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.)
மீண்டும் திரைக்கு வந்திருக்கும் நகுலுக்கு வித்தியாசமான காமிக்கல் பாத்திரம். இந்தச் சோதனை முயற்சியில் எலியாக மாட்டிக்கொண்டது நாம் மட்டுமல்ல, அவரும்தான் என்பதை முதல் பத்து நிமிடங்களிலே நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகிறது. வருத்தங்கள் நகுல்! ‘உல்டா’ உலகத்தில் திரைக்கதையிலும் சிரத்தை இல்லாத காரணத்தால் மூத்த நடிகர்களான ஆனந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பும் எடுபடவில்லை. முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான் ஒரு பட்டாளமே சேர்ந்து கிச்சு கிச்சு மூடினாலும், ஒரு டெசிபல் சிரிப்பொலிகூட திரையரங்கில் கேட்கவில்லை.
கலர் பேலட், லைட்டிங் என ஒவ்வொரு பிரேமுக்கும் அத்தனை மெனக்கெடலுடன் உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார். ஆனால், பல இடங்களில் என்ன நடக்கிறது, எது நடக்கிறது என்று புரியாத புதிராகவே காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இது படத்தொகுப்பாளர் தமிழ்க்குமரனின் பிழையா அல்லது திரைக்கதையாசிரியரின் பிழையா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட ‘ஒபேரா’ இசை நமது காதை பதம் பார்க்கிறது. அதிலும் பல இடங்களில் நகுலுக்கு வாசிக்கப்படும் பில்டப் பி.ஜி.எம் பெர்முடா முக்கோணத்தில் சிக்கிய விமானம் போல ‘ஏன், எதற்கு’ என இசையமைப்பாளர் அருண் என்.வியிடம் பல கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
மாறுபட்ட கதைக்களம் என்பதை ஆரம்பத்தில் கார்ட்டூன் அனிமேஷனில் பூடகமாகக் கூறியிருந்தாலும், தொடக்கக் காட்சிகள் சில கடந்த பின்னரே இது ‘தலைகீழ் உலகம்’ என்பது விளங்குகிறது. சாதாரண ஆள்மாறாட்ட கதைகளிலேயே சரியாகப் பயன்படுத்தினால் நகைச்சுவையின் தாக்கம், குத்தாட்டம் போடுகிற அளவுக்கு இருக்கும். இங்கே ‘தலைகீழ் உலகம்’ என்கிற வகையில் சலங்கை கட்டி ஆட வாய்ப்பிருந்தும் தவறவிட்டிருக்கிறார் இயக்குநர் ஆர்ஜிகே. கதாநாயகன் கதாநாயகி காதலுக்காக வைக்கப்பட்ட ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் தமிழ்த் திரைத்துறை இதுவரை பார்த்திராத ரொமான்ஸ் வன்முறை.
இடைவேளைக்குப் பிறகு நல்லது செய்தற்காக ‘வாஸ்கோடகாமா எனும் சிறை’யில் அடைக்கப்படுகிறார் நகுல். அங்கு நடக்கும் அடுத்த ஒரு மணி நேரச் சம்பவங்கள், மிகவும் பொறுமைசாலியைக் கூட பொறுமையிழக்க வைக்கும் பாணியில் இருப்பதோடு கதையின் மையத்தைப் போல நல்லவர்களையும் கெட்டவர்களாக மாற்றிவிடும் வல்லமை படைத்தது.
மொத்தத்தில் வித்தியாசமாக ஃபேன்டஸி பாணியில் ‘நல்லது செய்தால் தண்டனை’ என்று எடுக்கப்பட்ட இந்த ‘வாஸ்கோடகாமா’, கதையில் வரும் சிறை போலவே திரையரங்கம் சென்ற ரசிகர்களுக்குச் சிறையாக மாறி தண்டனை கொடுத்திருக்கிறது.