ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டது எப்படி? – ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்

தெஹ்ரான்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டது.

ஆனால், 110க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியி (வயது 62) ஈரானில் கடந்த 31ம் தேதி மர்மான முறையில் கொல்லப்பட்டார். ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இஸ்மாயில் ஹனியி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தபோது மர்மான முறையில் கொல்லப்பட்டார். விருந்தினர் மாளிகையில் இஸ்மாயில் தங்கி இருந்த அறையில் அதிகாலை 2 மணியளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது.

இந்த சம்பவத்தில் இஸ்மாயில் ஹனியி மற்றும் அவரது உதவியாளர் உயிரிழந்தனர். ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த கொலை சம்பவத்தை இஸ்ரேல் அரங்கேற்றியதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தெஹ்ரானில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் தங்கி இருந்த அறை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த தாக்குதலிலேயே இஸ்மாயில் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை இஸ்மாயில் தங்கி இருந்த அறை மீது ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 7 கிலோ வெடிமருந்து நிரப்பட்டுள்ளது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகைக்கு அருகே இருந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் படுகொலையை அரங்கேற்றியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இஸ்மாயில் தங்கி இருந்த விருந்தினர் மாளிகையின் அறையில் 2 மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டு வைக்கப்பட்டதாகவும், அந்த வெடிகுண்டு 31ம் தேதி நள்ளிரவு வெடிக்கவைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. அந்த வெடிகுண்டு அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டை சேர்ந்தவர்கள் இஸ்மாயில் தங்கி இருந்து அறையில் 2 மாதங்களுக்கு வைத்ததாக தகவல் பரவியது. ஆனால், தற்போது இஸ்மாயில் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், இந்த தாக்குதலை அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் அரங்கேற்றியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலை ஈரான் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.