உடல் எடையைக் குறைக்கவோ அதிகரிக்கவோ, சர்க்கரை நோய், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு ஏற்ற உணவு எது என்பதைத் தேர்வு செய்து சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. பற்களின் ஆரோக்கியத்துக்கான உணவைத் தேடிச் சாப்பிடுகிறோமா என்றால், பெரும்பலானவர்களின் பதில் இல்லை என்பதாக இருக்கும். பற்களை உறுதியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் உமா சக்தி:
தாங்கமுடியாத பல் வலி, பல்கூச்சம், ஈறுகளில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால்தான் அடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்கிறோம். வாய் சுகாதாரம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியமானது. பற்களை உறுதியாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலானானவர்கள் நினைப்பதில்லை. பற்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகள், ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
நமது வாயானது அதிகமாக புறச்சூழலுக்கு வெளிப்படுகிறது. எனவே, மாசு, பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் எனப் பலவும் வாயில் நுழைகின்றன. இவற்றைத் தடுப்பதற்கும், கையாள்வதற்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடும்போது வாயில் உமிழ்நீர் (எச்சில்) சுரப்பு அதிகமாகும். உமிழ்நீர் சுரப்பு குறையும்போது வாயில் அமில உற்பத்தி அதிகமாகும்.
பற்களில் அமில சுரப்பு அதிகமாக இருந்தால் பற்களில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பற்களில் அமிலத்தன்மை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தவும், பாக்டீரியாக்கள் நீங்கவும் வேண்டும் என்றால் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள், கால்சியம் அதிகமுள்ள கீரைகள், காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். ஈறுகள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்குத் தேவையான வைட்டமின் சி, இ, டி, போன்றவை அவசியம்.
கொய்யா, ஆப்பிள், எலுமிச்சை, ஸட்ராபெர்ரி போன்ற பழங்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் சி சத்து, ஈறுகளின் பாதுகாப்புக்கு உதவும். இவை உமிழ்நீர் சுரப்பையும் அதிகரிக்கும். புரதச்சத்துகளைக் கொண்டுள்ள சிக்கன், மீன், முட்டையின் வெள்ளைக் கரு போன்றவை ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். குழந்தைகளுக்கு ஈறுகள் ஆரோக்கியமாக உருவாவதற்கு இவை உதவும்.
இரவு நேரங்களில் அதிக இனிப்புள்ள, கஃபைன் சேர்க்கப்பட்ட காபி போன்ற உணவுகளைச் சாப்பிடுவதாலும் கார்பனேட்டட் குளிர்பானங்களைக் குடிப்பதாலும் பற்களின் மேற்புறத்திலிருக்கும் முதல் அடுக்கான எனாமல் சேதமடையத் தொடங்கும்.
இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளிலிருக்கும் அமிலங்கள், பற்களை அரித்து, பற்களில் சொத்தை விழுந்து ஓட்டை விழும். அதன் வழியாக பாக்டீரியாக்கள் உருவாவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் ஈறுகளில் நோய்த்தொற்று, ரத்தக்கசிவு, வாய் உலர்ந்து போவது, உதடுகளில் வெடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
லெமன் ஜூஸ் பற்களை அரிக்குமா?
ஆரஞ்சு, எலுமிச்சைப்பழங்களிலிருக்கு சிட்ரிக் அமிலம் பற்களை சேதப்படுத்தும் அளவுக்கு வீரியமான அமிலங்கள் இல்லை. அதை எடுத்துக்கொள்ளும்போது உமிழ்நீரும் சிட்ரிக் அமிலத்தின் தன்மையை சற்று மட்டுப்படுத்தும். மேலும், அதிலிருக்கும் வைட்டமின் சி சத்து, ஸ்கர்வி போன்ற பற்களை பாதிக்கும் நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும். எனவே, குறிப்பிட்ட நாள் இடைவெளியில் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை..
கரும்பு சாப்பிடலாமா?
கரும்பை சாப்பிடும்போது அதிலிருக்கும் வைட்டமின், மினரல், கால்சியம் சத்துகள் அப்படியே உடலுக்கு கிடைக்கும். கரும்பைக் கடித்துச் சுவைக்கும்போது அவை பிரஷ் போல செயல்பட்டு பற்களை சுத்தப்படும். இதனால் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழியும், அமிலத்தன்மையையும் குறைக்கும். எனவே, கரும்பு சீசனில் அதனை வாங்கி சுவைக்கத் தவறாதீர்கள்” என்றார்.
பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.