Ind vs SL: முதல் ஒருநாள் போட்டியில் ஏன் சூப்பர் ஓவர் இல்லை என்று தெரியுமா?

India vs Sri Lanka 1st ODI highlights: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சூரியகுமார் தலைமையில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று இருந்தது. இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டி தொடங்கியது. கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டி டையில் முடிந்தது. இரண்டு அணிகளும் 230 ரன்கள் அடித்திருந்த நிலையில் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை. கடந்த ஜூலை 30ம் தேதி பல்லேகலேயில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியும் டையில் இருந்தது. அதில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டியில் சூப்பர் ஓவர் இல்லை என்பதால் தற்போது தொடர் 0-0 என சமநிலையில் உள்ளது. ஐசிசி விதிகளின் படி, டி20 போட்டிகளில் மட்டுமே சூப்பர் ஓவர் முறை உள்ளது. அதே சமயம் ஒருநாள் போட்டிகளில் இந்த விதிகள் இல்லை. 

ஐசிசி விதிகளின்படி, ஒரு டி20 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்றால் சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்படும். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் அத்தகைய விதி எதுவும் தற்போது இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என்ற ஒவ்வொன்றிற்கும் தனி தனி விதிமுறைகள் உள்ளது. ஒரு சில தொடர்களில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் சூப்பர் ஓவர் இதுவரை வைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இதுவரை மூன்று போட்டிகள் மட்டுமே சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2019 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில் சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது. ஆனால் அதிலும் டையில் முடிந்தது. அதன் பிறகு, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 2020ம் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி சூப்பர் ஓவரில் முடிந்தது.

மேலும் கடந்த ஆண்டு தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்பில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2023 ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்று போட்டியின் போது சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதற்கு முன்பு டையில் முடிந்த போட்டிகளுக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 1987ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் போட்டி, மற்றும் 1988ல் லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் போட்டி டையில் முடிந்தது. இந்த போட்டிகளில் குறைவான விக்கெட்டுகளை இழந்த அணி வெற்றி என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் 15 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 2வது ஒருநாள் போட்டி நாளை ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற உள்ளது.

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, மொஹமட் ஷிராஸ், மஹேஷ் தீக்ஷனா, சமிக கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், நிஷான் மதுஷ்க, எஷான் மலிங்க

இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ரிஷப் பந்த், கலீல் அகமது, ரியான் பராக், ஹர்ஷித் ராணா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.