நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் வேடங்களில் நடித்து மக்களின் இதயங்களில் நல்ல நடிகராக இடம் பிடித்தாலும் அரசியல் நையாண்டி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர் மணிவண்ணன்.
சத்யராஜை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய ‘அமைதிப்படை’ தமிழ் சினிமாவில் நைய்யாண்டி அரசியல் படமாகத் தற்போதும் பேசப்பட்டு வருகிறது. இவர் இயக்கிய ‘நூறாவது நாள்’ சிறந்த த்ரில்லர் படமாக வியக்கப்படுகிறது. தமிழ் சினிமா உலகத்தால் மறக்கவே முடியாத மணிவண்ணனின் பிறந்தநாளையொட்டி (ஜூலை-31) அவரது சகோதரி மேகலாவிடம் பேசினேன்…
“என் வீட்டுல யூஸ் பண்ற மேட் கூட என் அண்ணன் மணிவண்ணன் வாங்கிக்கொடுத்ததுதான். கணக்கு வழக்கு பார்க்காம எங்களுக்காக எல்லாமே செஞ்சிருக்கார். அக்கா, தங்கச்சிகளுக்காக உயிரே விட்டுக்கிற என் அண்ணனுக்குப் பதில் என் உயிரை எடுத்திருந்தாக்கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அவர் இல்லாத ஒவ்வொரு நாளையும் வேதனையோடுதான் கடத்திக்கிட்டிருக்கோம்.
எங்க அப்பா ஜவுளி பிசினஸ் பண்ணினார். நல்லா வசதியான குடும்பம்தான். மூணு பொண்ணுங்க, ஒரே பையன். அந்த பையன்தான் அண்ணன் மணிவண்ணன். முதலில் அக்கா, ரெண்டாவது மணிவண்ணன் அண்ணன், மூணாவது சின்னக்கா, நாலாவது நான். எனக்கு அண்ணனுக்கும் 12 வயசு வித்தியாசம். என்னுடைய முதல் அக்காவுக்கு அப்பா கல்யாணம் பண்ணி வெச்சார். ரெண்டாவது அக்காவுக்கு அண்ணன் தான் கல்யாணம் பண்ணிவெச்சார்.
சினிமாவுக்கு வந்த புதிதுலேயே கஷ்டப்பட்டு, நல்லபடியாகக் கல்யாணம் பண்ணிவெச்சார். அதுக்கப்புறம்தான், அண்ணனுக்குத் திருமணம் ஆச்சு. அப்போ, நான் ஸ்கூல் படிச்சுக்கிட்டிருந்தேன். அண்ணன் சினிமாவுக்கு வந்ததால எங்க குடும்பமே சென்னைக்கு வந்துட்டோம். கடைக்குட்டி பிள்ளையா இருக்கிறதால அண்ணன் என்மேல ரொம்ப பாசமா இருப்பார். அண்ணனும் அண்ணியும் அவங்களோட மூத்த பிள்ளையாவே என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
எந்தளவுக்குன்னா, அண்ணன் பையன் ரகுவண்ணனும் பொண்ணு ஜோதியும் என்னை அத்தைனே கூப்பிட்டது கிடையாது, எப்பவுமே அக்கான்னுதான் கூப்பிடுவாங்க. அண்ணனும் அப்படிக் கூப்பிடக்கூடாதுன்னு சொன்னதுல்ல. ஏன்னா, என்னைத்தான் அவர் மகளா பார்க்க ஆரம்பிச்சுட்டாரே!
கலைஞர் தலைமையிலதான் அண்ணன் எனக்கு திருமணம் செய்து வெச்சார். எங்க குடும்பத்திலேயே இவ்வளவு பிரமாண்டமா பண்ணி வெச்ச திருமணம்னா என்னோட திருமணம்தான். எல்லா சீர் வரிசையும் அண்ணன்தான் பண்ணினார். கணவர் பொள்ளாச்சியில பெரிய விவசாயக் குடும்பம். திருமணமாகி 8 வருடங்களா எனக்கு குழந்தை கிடையாது. சொந்தக்காரங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
ரொம்ப நெருங்கிய சொந்தக்கார பொண்ணுக்கு வளைகாப்பு நடந்துச்சு. அவங்க அம்மா என்னை கூப்பிடல. அவ என்னோட ஃப்ரெண்ட்ங்குறதால என்னை அழைச்சிருந்தா. நானும் எங்க அண்ணியும் போயிருந்தோம். எனக்கு குழந்தை இல்லாததால, சடங்குல அவளுக்கு வளையல் போடவே விடல. நான் அதை பெரிய விஷயமா எடுத்துக்கல. ஆனால், எங்க அண்ணி இதப் பார்த்துட்டு ரொம்ப ஃபீல் பண்ணி அங்க சாப்பிடவே வேணாம்னு சொல்லி என்னை கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க. இது, எங்கண்ணனுக்கும் தெரிஞ்சு, என் தலையைத் தடவிக் கொடுத்து, ‘நீ கவலைப்படாதம்மா.. ராஜா மாதிரி உனக்கு புள்ளைங்க பிறப்பாங்க. அவங்க கிடக்குறாங்க’ன்னு ஆறுதல் சொன்னார்.
அவர், சொன்ன மாதிரியே ராஜா மாதிரி அடுத்தடுத்து எனக்கு ரெண்டு மகன்கள் பிறந்தாங்க. கமலா செல்வராஜ் ஹாஸ்பிட்டலில்தான் எனக்கு முதல் குழந்தை பிறந்துச்சு. என்னோட குழந்தையை புது கார்லதான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொல்லி, ஷோ ரூம் போயி புது மஸ்டா கார் வாங்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல் வாசலில் நிறுத்தி அதுலதான் என்னையும் என் குழந்தையையும் கூட்டிக்கிட்டு போனார். அப்படியொரு, பாசக்கார அண்ணன். நான் கர்ப்பிணியா இருக்கும்போதே என் ரூமையெல்லாம் வித்தியாசமா ரசிக்கும்படியா மாற்றினார். இப்படியொரு அண்ணனுக்கு உயிரைக்கூட கொடுப்பேன்னு சொல்றது நியாயம்தானே?
என் அண்ணனுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஆனால், என் குழந்தைங்களுக்கு கோவில்ல மொட்டை போட்டப்போ ஒரு மாமனா வந்து செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சாரு. என் பசங்கன்னா அவருக்கு உசுரு. பெரியக்கா பொண்ணோட திருமணத்துக்கும் நிறைய உதவி செஞ்சாரு. சின்னக்கா பசங்களையும் படிக்க வெச்சிருக்காரு. எங்களுக்கு தோணும்போதெல்லாம் நெக்லஸ், செயினுன்னு நகைங்களா வாங்கி கொடுத்துக்கிட்டே இருப்பாரு.
நான் ஸ்கூல் படிக்கும்போது அவர் முதல் முதலில் வாங்கிக் கொடுத்த குருவி நெக்லஸை இப்போவரைக்கும் பொக்கிஷமா வெச்சிருக்கேன். எங்கண்ணன் இயக்குநரா, நடிகரா சினிமாவுல உயர்ந்ததால நிறைய பணம் சம்பாதிச்சதால இதையெல்லாம் எங்களுக்குச் செய்யல. ஒரு கூலிக்காரனா இருந்திருந்தாக்கூட இப்படித்தான் செஞ்சிருக்கும்.
எங்கப்பா, எனக்கு கல்யாணம் ஆன எட்டாவது மாசத்திலேயே இறந்துட்டாரு. எங்கக்காக்கள், எனக்குன்னு மூணு பேருக்குமே அண்ணன் தான் அப்பாவோட இடத்துல இருந்து பார்த்துக்கிட்டாரு. அண்ணன் அடிக்கடி பொள்ளாச்சியிலதான் ஹூட்டிங் நடத்துவார். அப்போ, என் வீட்டிலிருந்துதான் அவருக்கு சாப்பாடு போகும். பருப்பு சாதம், மட்டம் சுக்கா, மட்டன் பிரியாணி, கீரை கடையல், கத்திரிக்கா பஜ்ஜின்னு ரொம்ப பிடிக்கும்ங்குறதால அதையே செஞ்சி கொடுத்து அனுப்புவேன். அண்ணனுக்கு அங்கண்ணன் கடை பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்.
எப்ப ஊருக்கு வந்தாலும் அங்கண்ணன் கடை பிரியாணியை வாங்கிட்டு வரச்சொல்லி சாப்பிடுவாரு. அண்ணனுக்குப் பிடிக்கும்னு, அவரோட நினைவு நாளுக்கு அங்கண்ணன் கடை பிரியாணியை வெச்சித்தான் குடும்பிடுவேன்” என்று கண்கலங்கி உருக்கமாக பேசுகிறவரிடம், மணிவண்ணன் மகன் ரகுவண்ணன், மகள் ஜோதி ஆகியோர் குறித்தும் தற்போதைய குடும்பச் சூழல் குறித்தும் கேட்டேன்.
“அண்ணன் இறந்த ரெண்டே மாசத்துல அண்ணியும் இறந்துட்டாங்க. அண்ணியை எங்கண்ணன் அப்படி லவ் பண்ணினாரு. எங்க போனாலும் அண்ணியைக் கூட்டிக்கிட்டு போவாரு. பயங்கரமா பாசம் காட்டுவாரு. ஆனா, ரெண்டு பேருமே ரொம்ப வருசம் வாழல. அண்ணிக்கு மார்பக புற்றுநோய் வந்துடுச்சு. நீங்க சொன்னா நம்பமாட்டீங்க. அவங்களோட உயிரை காப்பாற்றணும்னு சொல்லிட்டு, சில சொத்துகளை விற்று அண்ணன் செலவு செஞ்சாரு. ஒரு கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாருன்னா பார்த்துக்கோங்க. காப்பாற்றி ஒரு அஞ்சு வருசம் நல்லாருந்தாங்க.
அப்புறம் உடம்பெல்லாம் பரவி மூளை வரைக்கும் போயிடுச்சு. புற்றுநோயோட லாஸ்ட் ஸ்டேஜ் வந்துருச்சு. டாக்டர் இத்தனை நாட்கள்தான் அண்ணி உயிரோட இருப்பாங்கன்னு சொல்லிட்டாங்க. அண்ணிக்கிட்ட இந்த விஷயத்தை அண்ணன் சொல்லாம, அண்ணனோட ஃப்ரெண்ட் எழுத்தாளர் பாமரன்கிட்ட போன் பண்ணி ‘அவ இல்லாம நான் எப்படி வாழ்வேன்’னு சொல்லி அழுதுக்கிட்டிருந்தாரு. அண்ணியைப் பற்றிய கவலையே அண்ணனோட உடல் நலத்தைப் பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. அண்ணனுக்கு முதுகு தண்டுவடத்திலேயும் பிரச்னை இருந்துச்சு. அதெல்லாம் சேர்ந்துதான் அவருக்கு மாரடப்பை உண்டாக்கிடுச்சு. புற்றுநோயிலும் அவரோட இறப்பைத் தாங்க முடியாம அண்ணி அப்படி துடிச்சிக்கிட்டு கிடந்தாங்க.
அதுக்கப்புறம், ரெண்டு மாசத்துல அண்ணியும் இறந்துபோக அப்பாவும் அம்மாவும் இல்லாம அண்ணன் பசங்க ரொம்பவே வாடிப்போய்ட்டாங்க. பொண்ணு ஜோதிக்கு அண்ணன் இருக்கும்போதே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரு. ரகு வண்ணன் கல்யாணத்தப்போ அண்ணன் உயிரோட இல்ல. இப்போ, ரகு வண்ணனுக்கு ரெண்டு பசங்க. குடும்பத்தோட லண்டன்ல இருக்கான். அண்ணன் பொண்ணு ஜோதியும் லண்டன்லதான் இருக்கா. ரகுவண்ணன் ஒரு பெரிய கம்பெனியில சூப்பர்வைஸராகவும் ஜோதி ஐ.டி. ஃபீல்டுலேயும் இருக்காங்க.
மூன்று வருடங்களுக்கு முன்பு ரெண்டு ஃபேமிலியும் வந்துட்டு போனாங்க. அடுத்த வருடம் திரும்பவும் வந்துட்டு போறதா சொன்னாங்க. வாரத்துக்கு ஒரு முறை ஃபோன்ல பேசிக்கிட்டு நலம் விசாரிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். அண்ணனோட வீட்டை வாடகை விட்டுட்டோம். அங்க யாருமே இல்ல. அவர், இறக்கிறதுக்கு முன்னாடியே பொண்ணுக்கும் பையனுக்கும் செட்டில் பண்ணிட்டாரு. ரகு வண்ணனுக்கு கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க் வரைக்கும் கிடைச்சது. சத்யராஜ் அண்ணன் ரகுவண்ணனிடம் , “நீ நடி, ஆனா அப்பா சேர்த்து வெச்ச பணத்தை மட்டும் தயாரிப்புல போட்டுடாத’ அப்படின்னு ஆலோசனை சொன்னார்.
இப்பவும் சத்யராஜ் அண்ணன், இளவரசு அண்ணன் எல்லோருமே நலம் விசாரிச்சுக்கிட்டு எங்க குடும்பத்தினர் மேல அக்கறையா இருக்காங்க. எங்களுக்கே அண்ணனோட இழப்பைத் தாங்க முடியல. ஆனா, ரகுவண்ணனுக்கும் ஜோதிக்கும் இது மிகப்பெரிய இழப்பு. அவங்களுக்கு நாங்கதான் இருக்கோம். அண்ணனை மறந்தாத்தானே அவரோட பிறந்தநாள், நினைவு நாளில் நினைக்க! அவர் எப்போதுமே எங்களோடுதான் இருக்காரு. யாராலதான் அவரை மறக்கமுடியும்? ” என்று நெகிழ்கிறார்