பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மனு பாக்கர் தனது மூன்றாவது பதக்கத்தை இன்று வெல்வார் என எதிர்பார்க்க நிலையில் நூலிழையில் தோற்று நான்காம் இடம் பிடித்திருக்கிறார். மனு பாக்கர் எங்கே தவறிழைத்தார்?
மனு பாக்கர் ஏற்கனவே 10 மீ ஏர் பிஸ்டல் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இந்நிலையில், 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாக்கர் கலந்துகொண்டிருந்தார். இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று நேற்று நடந்திருந்தது. தகுதிச்சுற்றில் மனு 592 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதனால் இறுதிப்போட்டியிலும் மனு பாக்கர் கட்டாயம் வெல்வார் எனும் நம்பிக்கை இருந்தது. ஆனால், மனு பாக்கர் போராடி நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காம் இடம் பிடித்திருக்கிறார்.
இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் மொத்தம் 10 சீரிஸ்களை சுட வேண்டும். ஒரு சீரிஸூக்கு 5 ஷாட்கள். நான்காவது சீரிஸிலிருந்து ஒவ்வொரு சீரிஸின் முடிவிலும் கடைசி 8 வது இடத்திலிருந்து ஒவ்வொரு வீராங்கனையாக வெளியேற்றப்பட்டுக் கொண்டே வருவார்கள். அதேமாதிரி, இலக்கில் எங்கே சுட்டாலும் புள்ளிகள் வழங்கப்படாது. சரியாக இலக்கின் மையத்தை துளைத்து 10.2 புள்ளிகளுக்கு மேல் ஒவ்வொரு ஷாட்டிலும் எடுத்தால்தான் ஒவ்வொரு ஷாட்டுக்கும் 1 புள்ளி வீதம் கிடைக்கும். 10.2 க்கு குறைவாக எடுத்தால் எந்த புள்ளிகளும் வழங்கப்படாது. ஆரம்பத்தில் மனு மெதுவாகத்தான் தொடங்கினார். முதல் சீரிஸில் 5 ஷாட்களில் 2 ஷாட்களை மட்டும்தான் மனு 10.2க்கும் அதிகமாக அடித்திருந்தார். அதனால் முதல் சீரிஸின் முடிவில் 2 புள்ளிகளை மற்றுமே பெற்றிருந்தார்.
ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக ஆடி கூடுதல் புள்ளிகளைப் பெற்றார். 4, 4, 3 என அடுத்த மூன்று சீரிஸ்களிலும் எடுத்திருந்தார். நான்கு சீரிஸ்களின் முடிவில் 6 ஆம் இடத்தில் இருந்தார். 5 வது சீரிஸிலிருந்து எலிமினேஷன் தொடங்கியது. இந்த சமயத்தில் மனு நிலைமையை உணர்ந்து அசத்தினார். 5, 4, 4 என அநாயசமாக எடுத்து அடுத்த மூன்று சீரிஸ்கள் அதாவது 7 சீரிஸ்களின் முடிவில் இரண்டாம் இடத்தில் இருந்தார். 8 வது சீரிஸில்தான் பிரச்சனை ஆனது. 8 வது சீரிஸின் முடிவில் கடைசியாக நான்காவது இடத்தில் இருக்கும் வீராங்கனை எலிமினேட் ஆக வேண்டும். அந்த 8 வது சீரிஸில் மனு 2 புள்ளிகளை மட்டுமே எடுத்தார். இதனால் சறுக்கி நான்காவது இடத்துக்கு வந்தார். மொத்தமாக 28 புள்ளிகளை எடுத்து நான்காவது இடத்தில் மனுவும் ஹங்கேரியைச் சேர்ந்த வெரோனிகா என்பவரும் சமநிலையில் இருந்தனர். இருவரில் ஒருவரை எலிமினேட் செய்ய சூட் அவுட் வைக்கப்பட்டது. சூட் அவுட்டில் ஒரு சீரிஸ் இருவருக்கும் வழங்கப்பட்டது.
மனு பாக்கர் தனக்குரிய 5 ஷாட்களில் மூன்றை மட்டுமே சரியாகச் சுட்டு 3 புள்ளிகள் பெற, ஹங்கேரி வீராங்கனை 4 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்துக்கு முன்னேறினார். மனு நான்காவது இடத்தைப் பிடித்து எலிமினேட் ஆகினார்.
நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் 8 வது சீரிஸில் மனு பாக்கர் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றதுதான் பிரச்சனையாக மாறியது. இன்னும் ஒரு புள்ளியை மட்டும் அவர் கூடுதலாகப் பெற்றிருந்தால் சூட் அவுட்டுக்கே ஆட்டம் சென்றிருக்காது. மனு டாப் 3 க்குள் நீடித்து தனது மூன்றாவது பதக்கத்தையும் உறுதி செய்திருப்பார். போட்டிக்குப் பிறகு கண்ணீரோடு மனம் வருந்தி பேசிய மனு பாக்கர், “இறுதிப்போட்டியில் ரொம்பவே பதற்றமாக இருந்தேன். ஒவ்வொரு ஷாட்டாகத்தான் அணுகினேன். ஆனாலும் களம் எனக்கு சாதகமாக அமையவில்லை. என்னுடைய சிறப்பான செயல்பாட்டைக் கொடுக்கவே முயன்றேன். இரண்டு பதக்கங்களை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால், இந்த நான்காவது இடத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இன்றைக்குதான் மதிய உணவை அருந்தப் போகிறேன். இங்கே இத்தனை நாட்களாகக் காலை உணவை அருந்திவிட்டு பயிற்சிக்கு வந்துவிடுவேன். மாலைதான் திரும்புவேன். அதனால் இன்றைக்குதான் போட்டிகளெல்லாம் முடிந்துவிட்டதால் மதிய உணவை எடுத்துக்கொள்ளப் போகிறேன்.” எனக் கூறினார்.
மனு மூன்றாவது பதக்கத்தை வென்றிருந்தால் சிறப்பாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும், அவர் ஏற்கனவே இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துவிட்டார் என்பதையும் மறக்கக்கூடாது.