கொல்லிமலை ‘அரண்மனை காடு’ பகுதிக்குச் சாகசப் பயணமாக டிரெக்கிங் செல்ல நண்பர்களான மீனா (காயத்ரி சங்கர்), சரண் (தேவ்), சாரு (ப்ரீத்தி), ஜெர்ரி (மகேஷ்வரன்), சேது (ஜனா) ஆகிய நால்வர் குழு முடிவெடுக்கிறது. அவர்களுக்கு வழித்துணையாக முன்னாள் வனக்காவலரும், உள்ளூர் வாசியுமான மாரி (பால சரவணன்) ஐந்தாவதாகக் குழுவில் இணைகிறார். மாரி தனது அனுபவத்தால் காடுகளில் இருக்கும் மிருக நடமாட்டத்தையும், தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழையக்கூடாது என்கிற எச்சரிக்கையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறார். அது குழுவிலிருக்கும் சிலருக்கு எரிச்சலூட்ட, ஒரு எல்லைக்கு மேல் அவரது பேச்சைக் கேட்காமல் இருவர் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகிறார்கள். இதற்குப் பின் என்ன நடக்கிறது, அந்தக் காட்டுக்குள் இருக்கும் அமானுஷ்ய சக்தி என்ன, இவர்கள் உயிருடன் காட்டைவிட்டு வெளியேறினார்களா, இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே ‘பேச்சி’ படத்தின் கதை.
விபரீதத்தைப் புரிந்து கொள்ளாதவரிடம் தன்னிலையை விளக்கப் போராடுகிற தவிப்பு, அமானுஷ்யத்தைக் கண்டு மிரண்டு ஓடுகிற இடத்தில் அச்சம் என உணர்வுபூர்வமான கதாபாத்திரத்துக்கு வேண்டிய நியாயத்தைச் செய்திருக்கிறார் பால சரவணன். அவரின் பேச்சை எப்போதும் உதாசீனம் செய்யும் திமிரான நாயகியாக காயத்ரி சங்கர், கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து நம் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார். இவருக்குப் போட்டியாக “நாங்கள் அதற்கும் மேல” என்று ஜனா, சாரு கூட்டணி சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத மேட்டிமைத்தன உணர்வைக் கச்சிதமாகக் கடத்துகிறது. ஆனால், இது அனைத்துமே ஆங்காங்கே செயற்கையான உணர்வையும் தந்துவிடுகிறது. அப்பாவித்தனமான நடிப்பில் மகேஷ்வரனும், பிரச்னையைப் புரிந்து கொள்ளும் விவேகமான பாத்திரத்தில் சரணும் இன்னுமே சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கலாம்.
கொல்லிமலையின் அடர்ந்த வனத்தின் பிரமாண்டத்தையும், கதைக்கு உண்டான இருண்மையான ஒளியுணர்வையும் கவனத்துடன் வடிவமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பார்த்திபன். அமானுஷ்யங்களைத் திகிலூட்டும் விதத்தில் அழுத்தமான பிரேம்களில் பதிவு செய்திருக்கிறார். அதைப் பதற்றமான காட்சிக் கோர்வைகளால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் இக்னேடியஸ் அஷ்வின். பேய்ப் படங்களுக்கு அதிகமாகப் பயன்படும் வரைகலையைப் பயன்படுத்தாமல், ஒப்பனை மற்றும் படத்தொகுப்பிலேயே பயமுறுத்தியிருக்கும் படக்குழுவுக்குப் பாராட்டுகள்.
திகில் படங்களின் முதுகெலும்பான பின்னணி இசையை இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், அதன் அவசியத்தை உணர்ந்து தந்து மிரட்டியிருக்கிறார். காட்டுக்குள் இருக்கும் சூனியக்காரியின் வீடு, பில்லி சூனிய மாந்திரிக பொருள்கள், பயமுறுத்தும் பொம்மைகள் எனக் கலை இயக்குநர் குமார் கங்கப்பனின் வேலைப்பாடுகள் சிறப்பு. ஒரு திகில் படத்துக்கு அவசியமான அனைத்து தொழில்நுட்ப பணியையும் சிறப்பாகச் செய்திருக்கிறது படக்குழு. குறைந்த பட்ஜெட்டில் ஹாரர் ஜானருக்கு நியாயம் கற்பிக்கும் இந்த முயற்சி கவனிக்கத்தக்கது.
பேய், பிசாசு, அமானுஷ்யம் என்று கதைக்குள் செல்வதற்கு சில காட்சிகளில் கதாபாத்திரத் தன்மையை வெளிப்படுத்திய விதம் கதையோடு பயணிக்க வைக்கிறது. போகப்போக ஹாரர் படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்களான பேய் திடீரென முன்னால் வந்து நிற்பது, ஒலிப்பதிவு மூலம் பயமுறுத்துவது, ஒரே நபர்கள் இரு இடங்களில் தோன்றுவது எனப் பழைய மாவில் புது தோசையை வார்க்க முயன்றிருக்கிறார்கள். அது ஆங்காங்கே வேலை செய்திருக்கிறது. ஆனால் “திகில் எல்லாம் ஓகே பா… கதையோட மையப்புள்ளி எங்கே?” என நாம் தேட வேண்டியிருக்கிறது.
அதற்குப் பதிலாக வரும் பிளாஷ்பேக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இரண்டாம் பாதியில் எதிர்பாரா அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத சக்திகள், விசித்திரமான சத்தங்கள் எனத் திகில் கூறுகளை வைத்து நிரப்பியிருக்கிறார்கள். ஆங்காங்கே ‘பேச்சி’ வெளிவரும் இடங்கள் மட்டும் சுவாரஸ்யம் தருகின்றன. பால சரவணனின் பாத்திரம் தவிரப் பிற பாத்திரங்கள் எதுவும் உணர்வுபூர்வமாக நம்மை ஆக்கிரமிக்காததுதான் படத்தின் பிரதான சிக்கலே! வலிமையான பின்கதைகள், விவரணைகள் மிஸ்ஸிங் பாஸ்!
அதிலும் அதுவரை ஹாரர் மீட்டரை எகிறவைத்து சுவாரஸ்யம் சேர்க்கும் திரைக்கதை, க்ளைமாக்ஸில் டேக் டைவர்சன் என ட்விஸ்ட் அடித்து ஒரு கதையைச் சொல்வது எல்லாம் போங்குங்கண்ணா! ஒரே ஊரிலிருக்கும் பால சரவணனுக்கு அந்தத் ‘திருப்பத்துக்குக் காரணமான பெண்ணின் முகம்’ பரிச்சயப்பட்டிருக்காதா என்ன?
சிறப்பான தொழில்நுட்பம், க்ளைமாக்ஸுக்கு முன்புவரை கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதை என மிரட்டியிருக்கும் இந்த ‘பேச்சி’, மேம்போக்காக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள், மற்றும் லாஜிக்கில்லாத திருப்பத்தால் மற்றுமொரு பேய் படமாகிப் போகிறது.