உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் மஹி பகுதியில் அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சோட்டி சர்வான் கிராமத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இங்கு அணு மின் நிலையம் அமைவதற்கு சோட்டி சர்வான் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து போலீஸார், அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலில் இருந்த சிலர் போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதில் 3 போலீஸாரும், கிராம மக்கள் சிலரும் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தினரைக் கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.