ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது. போலீஸார் உட்பட 6 அரசு ஊழியர்கள், போதைப்பொருள் விற்பனை மூலம் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது கண்டறியப்பட்டது. அவர்களை அரசியலமைப்பு சட்டத்தின் 311(2)(சி) பிரிவை பயன்படுத்தி துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பணிநீக்கம் செய்துள்ளார்.
விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களால் நடத்தப்படும் போதைப்பொருள்- தீவிரவாத நெட்வொர்க்கில் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை ஆதரிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஜம்மு காஷ்மீர் அரசு கடுமையாக நடந்து கொள்கிறது. இந்த பணிநீக்க நடவடிக்கை, 2019-ல் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு தொடங்கியது. பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகள் அரசுப் பணி மற்றும் காவல் துறையில் ஊடுருவுவதை தடுப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.