புதுடெல்லி: திரையரங்கில் திரைப்படங்கள் வெளியானதும் ரகசியமாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடும் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் உண்டு. மறுபுறம், ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் திருடி வேறொரு ஆன்லைன் தளத்தில் வெளியிடுவது பெருகி வருகிறது. இந்த பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது:
திரைப்படங்கள் திருடப்படுவதால் கலைஞர்களின் பல வருட கடின உழைப்பு பாழாய் போய்விடுகிறது. இதனால் திரைத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘‘மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கேமரா கொண்டு திருட்டுத்தனமாகப் படங்கள் பதிவு செய்யப்படுவதை தடுப்பதில் மட்டுமே இந்த சட்டம் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஆன்லைன் சினிமா திருட்டைத் தடுத்து நிறுத்த தேவையான உறுதியான ஒழுங்குமுறை இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.