திருநெல்வேலி மாவட்டம், சமாதான புரத்தை அடுத்துள்ள தெற்கு பஜாருக்குச் செல்லும் வழியில், பிரதான சாலையின் நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், `சிறிய பள்ளம்’ போன்ற ஒன்று உள்ளது. அது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தபோது, அது முனிசிபாலிட்டியின் சம்ப் பள்ளம் என்பது தெரியவந்தது. மேலும், தினமும் அந்த சம்ப் பள்ளத்தின் வழியாக பைப் செலுத்தி, தண்ணீர் இறைப்பார்கள் என்றும் மக்கள் கூறினர்.
இந்தப் பள்ளத்தால் பெரிய அளவு பாதிப்பில்லை என்றாலும், மழை நேரங்களில் தண்ணீர் இந்தப் பள்ளத்தில் சென்று தேங்கி, சிரமத்தை ஏற்படுத்துகிறதாம். இது சிறிது படிக்கட்டு போன்று உள்ளதால், கார்கள் ஏறி இறங்கும் பட்சத்தில் டயர் பேலன்ஸ் இழக்கிறது என்கின்றனர்.
“இந்தப் பள்ளத்தில் பல நேரங்களில் வாகனங்கள் சிக்கி விடுகின்றன. ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர். அப்படியிருக்கையில், ஏதேனும் ஒரு வாகனம் தடுமாறி நின்றுவிட்டால், பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு விடும். ஒரு மூடியைக் கொண்டு மூடிவிட்டு, தேவைப்படும்போது திறந்து பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம். ஆனாலும், யாரையும் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இது மழைக்காலம், அதிகம் மழை பெய்தால் சாலையில் மழைநீர் நிரம்பிவிடும். அந்த நேரத்தில் இந்தப் பள்ளம் இருப்பது தெரியாமல், நடந்து செல்பவர்களுக்கோ… வாகனத்தில் செல்பவர்களுக்கோ எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அதிகாரிகளிடம், இதை மூடி ஏதாவது செய்யுங்கள் எனக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அவர்களோ அலட்சியமாக இருக்கின்றனர்.” என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, மக்களின் அச்சத்தைப் போக்குவார்களா?!