கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறை துறை மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. துறை சார்ந்த பெண் அதிகாரி ஒருவரை அவர் மிரட்டுவது போன்ற வீடியோ வெளிவந்து சர்ச்சையானது. இதனால், பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த பெண் அதிகாரியிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அவரை வலியுறுத்தியுள்ளது. பதவி விலகவும் கூறியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மாநில தலைவரான சுப்ரதா, தொலைபேசி வழியே அகில் கிரியை தொடர்பு கொண்டு, கட்சியின் நிலைப்பாட்டை எடுத்து கூறினார்.
தொடர்ந்து, கட்சியின் செய்தி தொடர்பாளரான சாந்தனு சென் கூறும்போது, எங்களுடைய கட்சி ராஜதர்மம் முறையை பின்பற்றுகிறது. ஒரு கட்சியாக எங்களாலேயே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியும்.
பெண்களுக்கு எதிரான பா.ஜ.க.வால் ஒருபோதும் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க முடியாது. கடந்த காலத்தில், இதேபோன்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட சி.பி.எம். கட்சியாலும், ராஜதர்ம முறையை பின்பற்ற முடியாது என கூறியுள்ளார்.