மதுவில் விஷம் கலந்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

சென்னை: மதுபானத்தில் பூச்சிக்கொல்லி விஷம் கலந்து கொடுத்து கணவரை கொலை செய்ததாக மனைவிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுலோச்சனா என்ற பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்குமிடையே கூடா நட்பு இருப்பதாக சந்தேகமடைந்த சுலோச்சனாவின் கணவர் முத்துச்சாமி தனது மனைவியை கண்டித்துள்ளார். கடந்த 2012 நவம்பர் 12 அன்று சுலோச்சனாவிடம் மதுபாட்டில் வாங்கிவரும்படி அவரது கணவர் கூறியுள்ளார். அந்த மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து சுலோச்சனா கொடுத்துள்ளார். அதை முத்துச்சாமியும், அவருடைய நண்பரும் சேர்ந்து குடித்துள்ளனர். இதில் முத்துச்சாமி உயிரிழந்தார். அவருடைய நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம், சுலோச்சனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2016 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுலோச்சனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.



அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார். பதிலுக்கு அரசு தரப்பில், சுலோச்சனா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறந்தவரின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இறந்தவருடன் சேர்ந்து மது அருந்திய நண்பரிடம் போலீஸார் 13 நாட்கள் கழித்தே விசாரி்த்துள்ளனர். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றும் சமர்ப்பிக்கப்படவில்லை. சம்பவம் நடந்த மறுநாள் தீபாவளி என்பதால் ஒருநாள் கழித்து புகார் கொடுத்ததாக இறந்தவரின் சகோதரர் சாட்சியம் அளித்திருப்பதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என தீர்ப்பளித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.