மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ஆக.14-ல் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து ஆக.14-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதிமுகவின் 30-வது பொதுக்குழு கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் 1,350 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை புரிந்து கொண்டு பாஜக தனது இந்துத்துவா செயல் திட்டங்களைக் கைவிட வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு பெருவெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு நன்றி. திருச்சியில் மதிமுக வேட்பாளர் வெற்றிக்கு துணை நின்ற முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. வெற்றி பெற்ற முதன்மைச் செயலாளர் துரைவைகோவுக்கு பாராட்டுகள். மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்.



பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை அலட்சியப்படுத்தியதைக் கண்டித்தும், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் ஆக.14-ல் காலை 10 மணிக்கு மதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை (செப்.15) மதிமுக சார்பில் சென்னை, காமராஜர் அரங்கில் சிறப்பாக கொண்டாடுவோம். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெறும். மத்திய பட்ஜெட் வெறும் கானல் நீர். இது ஒருபுறமிருக்க மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை கூடாது.தமிழக காங்கிரஸ் கர்நாடகம் சென்று மேகேதாட்டு கட்டக் கூடாது என்று சொல்ல முடியுமா. அங்கொரு கொள்கை, இங்கொரு கொள்கை இருக்கிறது. எனினும் இதைத் தடுக்க திமுக தலைமையிலான கூட்டணி தீவிரமாக செயல்படுகிறோம்.

அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அதிமுக ஆட்சியிலும் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பாதுகாப்போடு இருக்கின்றனர். போதை பொருள்கள் தான் இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக அரசு நடுநிலையோடு செயல்படுகிறது. மத்திய அரசு பல மாநிலங்களை ஓரவஞ்சனையோடு தான் பார்க்கிறது. கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.