கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, கொல்கத்தாவைச் சுற்றி அமைந்துள்ள ஹவுரா, சால்ட் லேக், பாரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ் வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையமும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. விமான நிலைய ரன்வே,டாக்ஸிவே முழுவதும் சுமார் 2 அடிஉயரத்துக்கு வெள்ள நீர் தேங்கிநிற்கிறது. இதனால் விமானங்களை இங்கிருந்து இயக்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விமானநிலையத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதைப் போலவே ஹவுரா, மேற்கு பர்தமான், பிர்பும், கிழக்குபர்தமான், ஹூக்ளி, நாடியா, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
நேற்று காலை 8 மணிவரை கொல்கத்தாவில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழை காரணமாக கொல்கத்தாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.