மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் உள்ள சஹ்பூர் என்ற இடத்தில் உள்ள ஹர்துல்பாபா கோயிலில் மத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் திரளான குழந்தைகள் கலந்துகொண்டனர். கடந்த சில நாள்களாக மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் நின்ற இடத்தில் கோயில் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் ஏராளமான குழந்தைகள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்புத்துறையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து இடிபாடுகளை அப்புறப்படுத்திவிட்டு, குழந்தைகளை மீட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 9 குழந்தைகள் இறந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இது தவிர ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். குழந்தைகள் மண்ணில் சிவலிங்கம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த கோயில் சுவர் 50 ஆண்டுகள் பழமையானது ஆகும். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் மோகன் யாதவ், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நேற்றுத்தான் மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள் உயிரிழந்தனர். அவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது மழை பெய்ததால் ஒரு வீட்டிற்கு அருகில் ஒதுங்கினர்.
அந்நேரம் அந்த வீட்டின் சுவர் இடிந்துவிழுந்துவிட்டது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.