வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: 32 பேர் பலி; இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுரை

டாக்கா: வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஆளும் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மூண்டுள்ள மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மோதல் வலுத்துவரும் நிலையில் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் எக்ஸ் பக்கத்தில், “சில்ஹெட் இந்திய துணை தூகரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் வசிக்கும் மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் தூதரக அலுவலகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள். ஏதேனும் தேவை இருப்பின் +88-01313076402 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்ட பின்னணி: வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை வங்கதேச அரசு அண்மையில் அறிவித்தது.



இது பாரபட்சமானது என்றும் திறமை அடிப்படையில் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து போராட்டம் தீவிரம் அடைந்தது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆளும் அவாமி லீக் அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்துக்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவாமி லீக், சத்ரா லீக், ஜூபோ லீக் செயற்பாட்டாளர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வன்முறை வெடித்தது. இதுவரை 32 பேர் பலியானதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.