கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்குப் பிறகு தமிழர்கள் உட்பட 300 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடுவது மீட்புப் படையினருக்கு சவாலானதாக அமைந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை 358 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி 5-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. மேலும் தமிழர்கள் உட்பட சுமார் 300 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. காணாமல் போனவர்களையும் இடிபாடுகளில் சிக்கியுள்ள சடலங்களையும் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், தொடர்ந்து மழை பெய்து வருவது மீட்புப் படையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனினும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. சாலியாற்றில் இருந்து மீட்கப்படும் சடலங்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் நேற்றுகூறும்போது, “வயநாடு பகுதிக்கு பாய், பெட்ஷீட் உள்ளிட்ட பொருட்கள் அவசரமாக தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் இப்போது பள்ளிகளில் தங்கி உள்ளனர். பள்ளிகளை திறக்கவேண்டி இருப்பதால், வீடு இழந்தவர்களை தங்க வைப்பதற்கான மாற்றுஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதற்கு உதவ தயாராக உள்ளோம்” என்றார்.
இதனிடையே, கேரள நிலச்சரிவால் உயிரிழந்தோரின் ஆயுள் காப்பீட்டுத் தொகை அவர்களுடைய குடும்பத்தினருக்கு உடனடியாக கிடைக்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.