மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.
குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.
டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார்.
இந்நிலையில் வாசிம் அக்ரம், ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்களை போல தாம் சொல்வதை பந்து கேட்கும் அளவுக்கு ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான திறமையை கொண்டிருப்பதாக இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பும்ராவின் 2 செயல்பாடுகளை பார்த்து வியந்தேன் என்று சொல்ல வேண்டும். முதல் சம்பவம் என்னவென்றால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியது. ஏனென்றால் 2வது ஸ்பெல்லின் முதல் பந்தில் ரிவர்ஸ்விங் செய்து ரிஸ்வானின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அங்குதான் பாகிஸ்தான் தனது பிடியை இழந்தது. மற்றொரு சம்பவம் இறுதிப்போட்டியில் நடந்தது. என்னதான் கிளாசனின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினால் என்றாலும், மார்கோ ஜான்சனின் விக்கெட்டை வீழ்த்தி பும்ரா அழுத்தத்தை கொடுத்தார்.
வாழ்வின் சில நேரங்களில் தான் நம் கையில் உள்ள பந்து என்ன சொன்னாலும் அதனை அப்படியே கேட்கும் என்று சொல்வார்கள். வாசிம் அக்ரம், ஷேன் வார்னே மற்றும் வாக்கர் யூனிஸ் இருவரும் தங்களின் பவுலிங்கில் உச்சத்தில் இருந்தபோது, அப்படிதான் பவுலிங் செய்தார்கள். ஷேன் வார்னே பந்திடம் ‘தரையில் பட்டு திரும்பி லெக் ஸ்ட்ம்பை அடி’என்று சொல்வார். அதுவும் அவ்வாறே பிட்சாகி நேராக சென்று லெக் ஸ்டம்பை தகர்த்து செல்லும்.
இந்த டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் செயல்பாடுகள் அவர்களை போல் இருந்தது. பும்ராவை சொல்வதை பந்து அப்படியே கேட்டது. பும்ரா தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை டி20 உலகக்கோப்பையில் தொடரில் காட்டிவிட்டார். பந்தை தனது சொல்லுக்கு கட்டுப்படுத்திவிட்டார். இதுபோன்ற திறமைகளை பார்ப்பது எளிதான விஷயமல்ல” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.