இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.
வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய நட்சத்திரங்கள் !
வயநாடு மாவட்டத்திலுள்ள சூரல்மலை, முண்டகை ஆகிய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடிகை நிகிலா விமல் கேரளாவிலுள்ள DYFI உடன் இணைந்து நிவாரணத்துக்காக பல உதவிகளைச் செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த பேரிடர் நிவரணத்துக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் உதவிகரம் நீட்டியுள்ளனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்ச ரூபாயை கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
நடிகர் விக்ரமும் 20 லட்ச ரூபாயை நிவாரண நிதிக்குக் கொடுத்திருக்கிறார். நயந்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். பகத் ஃபாசிலும் நஸ்ரியாவும் இணைந்து 25 லட்ச நிதியுதவி அளித்துள்ளனர். மோகன் லால் 3 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு பாதிக்கபட்ட களத்திற்கும் நேரடியாக ராணுவ சீருடை அணிந்து நிவாரணப் பணிகளை பார்வையிட்டார்.
வரிசைகட்டும் தீபாவளி ரிலீஸ்!
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘ப்ரதர்’ திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்திருக்கிறார். பூமிகா, நட்டி (நட்ராஜ்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதையும் தாண்டி இன்னும் சில திரைப்படங்களும் தீபாவளி ரேஸில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
பாடலுக்காக இந்தத் தொழிநுட்பம்!
விஜய் நடித்திருக்கிற ‘தி கோட்’ திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகிறது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் விஜய் டபுள் ஆக்ஷ்னில் நடிக்கிறார். இந்த டபுள் ஆக்ஷனில் இளம் வயது விஜய் கதாபாத்திரத்துக்கு டீ -ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘ஸ்பார்க்’ பாடல் நேற்றைய தினம் வெளியானது. இந்தப் பாடலை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் எழுதியிருக்கிறார். இந்த பாடலிலும் இளம் வயது விஜய் கதாபாத்திரத்தை டீ ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடலுக்காக இந்த டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவில் பயன்படுத்தியது இதுவே முதல் முறை!
இயக்குநரை பாராட்டிய எஸ்.ஜே, சூர்யா!
எஸ்.ஜே. சூர்யா பிரமாண்ட லைன் அப்களை தனது கைவசம் வைத்துள்ளார். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் தற்போது விக்ரமுடன் இணைந்து நடித்துவரும் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் குறித்தான இவருடைய பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த பதிவில் அவர், ” வீர தீர சூரன் திரைப்படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸ் பகுதியின் படப்பிடிப்பை எடுத்து முடித்துவிட்டோம்.இந்த காட்சிக்காக படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய அசிஸ்டன்ட்களை வைத்து 10 நாட்கள் ரிகர்சல் செய்திருக்கிறார்.
அதன் பிறகு என்னையும் விக்ரம் சாரையும் சுராஜ் சாரையும் அழைத்து வந்து மூன்று நாட்களின் இரவு நேரங்களில் ரிகர்சல் செய்தார். அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கியவர் இன்று காலை 5.05 மணிக்கு அந்தக் காட்சியை முடித்துவிட்டார். இயக்குநர் அருண் குமார் குறித்து நான் ஒரு வார்த்தை சொல்வதற்கு ஆசைப்படுகிறேன். கலைத்தாயின் இளைய மகன் நீங்கள்!” என நேற்றைய தினம் பதிவிட்டு மனதார பாராட்டியிருக்கிறார்.