‘நெட்பிளக்ஸ் (Netflix)’ ஓடிடி தளத்தில் ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் முன்னணி இயக்குநர்கள் பற்றிய ஆவணப்படம் தொடராக வெளியாகவுள்ளது.
அதன் முதல் ஆவணப்படமாக ‘மாவீரன்’, ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களை இயக்கிய ராஜமெளலியின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில் ராஜமெளலி தனது திரையுலகப் பயணம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்நிலையில் ராம்சரண் நடித்த ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பின் போது தனது மனைவிக்கு விபத்து நடந்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “என் வாழ்க்கையை உலுக்கிய தருணம் என் மனைவியின் விபத்துதான். ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பின்போதுதான் இந்த விபத்து நடந்தது. அந்தசமயத்தில் நானும் என் மனைவியுடன்தான் இருந்தேன். ரத்தம் வழிந்தபடி இருந்தார் என் மனைவி. நான் என் வாழ்நாளில் உடைந்துபோய் அழுத தருணம் அதுதான்.
மருத்துவனைக்குக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் அது 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் நான் கதறி அழுதேன். ‘கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம்’ என்று நினைத்தேன். ஆனால் அந்த நேரத்தில்கூட நான் அதைச் செய்யாமல், எனக்குத் தெரிந்த மருத்துவர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து உதவிக் கேட்டேன்.
‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்ற ‘கர்ம யோகம்’தான் நான் என் வாழ்வியலாக்கிக் கொண்டிருக்கிறேன். சினிமாதான் எனக்கு எல்லாம். சினிமாதான் என் கடவுள்” என்று கூறினார்.
‘பாகுபலி’ படத்தின் வெளியீட்டு சமயத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ராஜமெளலி, தன்னை ஒரு நாத்திகனாக அடையாளப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அப்போது நாத்திகம் பற்றி பேசியிருந்த ராஜமெளலி, “ஆரம்பத்தில் நான் இந்து மதம் சார்ந்த புராணங்களை நிறைய படித்தேன். பிறகு கிறிஸ்தவ மதம் சார்ந்த புனித நூல்களைப் படித்தேன். அப்போது நான் ஆத்திகனாக இருந்தேன். அதன்பிறகு, எழுத்தாளர் ‘Ayn Rand அய்ன் ராண்ட்’ அவர்களின் நூல்களை வாசித்து, தத்துவங்களைப் படித்த பிறகு நாத்திகனானேன். மதம் மனிதர்களைச் சுரண்டுகிறது என்பதை அறிந்துகொண்டேன். அதிலிருந்து மதத்தைவிட்டுத் தள்ளியே இருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.