கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 6-வது நாளாக தொடர்ந்து இரவு பகல் எனப் பாராமல் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுவரும் ராணுவ வீரர்களை பாராட்டி மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர் எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
கேரளாவில் AMLP பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ரயான் என்ற சிறுவன் எழுதிய கடிதத்தில், “என் அன்பான வயநாடு, மிகப் பெரும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு, அழிவை சந்தித்திருக்கிறது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமிதம் அடைந்தேன். பசியை போக்க பிஸ்கட் சாப்பிட்டு, அப்படியே தொடர்ந்து இயங்கி உடனடியாக பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தைக் காப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன்.” என எழுதியிருக்கிறார்.
இந்த கடிதத்துக்கு பதிலளித்த இந்திய ராணுவத் தளபதி, “அன்புள்ள மாஸ்டர் ரயான், உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டன. துன்பமான காலங்களில், நாங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கிறோம். உங்கள் கடிதம் இந்த பணியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் ராணுவ உடை அணிந்து எங்களுடன் இணைந்து நிற்பதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.