Wayanad Landslide: மண்ணில் புதைந்த பள்ளிக்கூடம்; ராணுவ உடையில், உடைந்து கண்கலங்கிய மோகன் லால்!

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை, மலையாள சூப்பர் ஸ்டாரும், லெப்டினன்ட் கர்ணலுமான மோகன் லால் பார்வையிட்டார். ராணுவ உடையில் சென்ற மோகன் லால் ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக முண்டக்கை பகுதிக்குச் சென்றார். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் உரையாடினார். நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிலச்சரிவின் மையப்பகுதியான புஞ்சிரமற்றம் வரை மோகன் லால் சென்று பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மோகன் லால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வயநாட்டில் ஏற்பட்டது இந்தியா கண்ட மிகப்பெரிய இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும். நிமிட நேரத்தில் உறவினர்களையும், வீட்டையும், நிலத்தையும் இழந்து நிற்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்.

ராணுவ உடையில் வயநாடு பாதிப்பை பார்வையிட்ட மோகன் லால்

இந்த மக்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும். வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் துயரமானதாகும். பேரிடரால் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். அனைவரும் உதவுவது மிகப்பெரிய செயலாகும். சாதாரண மனிதர்கள் முதல் ராணுவம் வரை இந்தப் பணியில் பங்கெடுத்துள்ளார்கள். மெட்ராஸ் 122 பட்டாலியனில் நான் கடந்த 16 ஆண்டுகளாக அங்கமாக உள்ளேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும், மனதால் அவர்களை வணங்கவும் நான் வந்துள்ளேன். ராணுவம் அமைத்த பெய்லி பாலம் மிகப்பெரிய அற்புதமாகும். அதன் மூலம்தான் மீட்புப் பணிகள் எளிதானது. இந்த நிலை மாறுவதற்கு கடவுளின் உதவி நம்முடன் இருக்கும். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை புனரமைப்பதற்காக எனது விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் மூன்று கோடி ரூபாய் வழங்கப்படும். சூழ்நிலையைப் பார்த்து தேவைப்பட்டால் அறக்கட்டளை மூலம் மீண்டும் நிதி வழங்குவோம்” என்றார்.

வயநாடு நிலச்சரிவை ராணுவ உடையில் சென்று பார்வையிட்ட நடிகர் மோகன் லால்

மோகன் லாலுடன் சென்ற மேஜர் ரவி கூறுகையில், “விஸ்வசாந்தி அறக்கட்டளையில் மனிதர்களை நேசிக்கும் பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த வெள்ளார்மலை பள்ளிக்கூடத்தை பார்த்ததும் மோகன் லாலின் கண்களில் குளமாகின. மோகன் லாலிடம் தெரிவிக்காமல் ஒரு விஷயத்தை நான் கூறுகிறேன். வெள்ளார்மலை ஸ்கூலை சீரமைக்கும் பணியை விஸ்வசாந்தி அறக்கட்டளை மேற்கொள்ளும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.