Ashish Nehra News Tamil : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாடியிருக்க தேவையில்லை என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் விளையாட வைத்தது பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தவறான முடிவு என கூறியிருக்கும் அவர், இந்த தொடரில் புதிய பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இப்படியான சரியான நேரத்தையும் வாய்ப்பையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீணடித்துள்ளார் என்றும் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.
ஏன் ரோகித், விராட் கோலி தேவையில்லை?
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு தேவையில்லை என்ற காரணத்தையும் ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார். அவர் இவர்கள் இருவரின் இடம் குறித்து பேசும்போது, ” இப்போது தான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 உலகக்கோப்பை வென்று கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த ஹோம் சீரிஸ் வரை ஓய்வு கொடுத்திருக்கலாம். சுமார் 2 மாதங்கள் வரை அவர்கள் இருவரும் ஓய்வெடுத்துவிட்டு புத்துணர்ச்சியோடு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு வந்திருக்கலாம். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் முடிந்தால், அடுத்ததாக பிப்ரவரி மாதம் தான் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டி தொடர் இருக்கிறது. அதனால், ரோகித், விராட் கோலி இருவருக்கும் இந்த ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுத்திருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் புதியவர் ஒன்றும் அல்ல
தொடர்ந்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா, “கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் முதல் தொடர் என்பதால் ரோகித், விராட் கோலி இருவரும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என விரும்பியிருக்கலாம். ஆனால் இவர்களுடன் பழகுவதற்கு கவுதம் கம்பீர் ஒன்றும் புதியவர் அல்ல, வெளிநாட்டு பிளேயரும் அல்ல. இவர்களுடன் ஏற்கனவே பல கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாக ஆடியிருக்கிறார் கவுதம். அதனால் ரோகித், விராட் கோலியை பற்றி புதிதாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றும் இல்லை.” என கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை அணிக்கு எதிரான தொடரை வெல்வதற்கு இவர்கள் இருவரும் இருக்க வேண்டும் என கவுதம் கம்பீர் நினைத்திருக்கலாம் என கூறியுள்ள ஆஷிஸ் நெஹ்ரா, ஹோம் சீரிஸில் இந்தியா சிறப்பாக ஆடும் எனவும் தெரிவித்துள்ளார்.