கடந்த பல வாரங்களாகவே, தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி உயர்த்தப்படப் போவதாக பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டுவருகின்றன. இதுபற்றி உதயநிதி ஸ்டாலின், `எதுவாக இருந்தாலும் முதலமைச்சரே முடிவெடுப்பார்’ என செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலின் தற்போது இந்த விவகாரத்தில் வாய்திறந்திருக்கிறார். முன்னதாக, ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலினிடம், `உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்திருக்கிறது, முதலமைச்சர் அதை பரிசீலிப்பாரா?’ என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு ஸ்டாலின், `வலுத்திருக்கிறதே தவிர, பழுக்கவில்லை’ என்று பதிலளித்தார். மேலும், தென்மேற்கு பருவமழை குறித்த கேள்விக்கு, எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.