புதுடெல்லி,
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வன்முறையாக வெடித்தது.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடந்த மாதத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த சூழலில், இன்றும் அந்நாட்டில் வன்முறை வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் ராணுவ விமானத்தில் பிரதமர் ஷேக் சீனா புறப்பட்டார். இந்தியாவில் அவர் தஞ்சமடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, டெல்லியருகே உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் ராணுவ தளத்தில் பாதுகாப்பாக இன்று வந்திறங்கினார்.
அவர் இந்தியாவில் சிறிது காலம் வரை தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு செல்ல கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஹசீனா, சொந்த நாட்டை விட்டு தப்பி வருவது இது முதன்முறையல்ல. இதற்கு முன், 1975-ம் ஆண்டு கொடூர சம்பவம் ஒன்று நடந்தது. இதில், ஹசீனாவின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். வங்காளதேச நாட்டை நிறுவியவரான, அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர், நாட்டின் புதிய அதிபரான 4 ஆண்டுகளில் இந்த படுகொலை சம்பவம் நடந்தது. அப்போது, நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அரசியல் குழப்பம் மற்றும் ராணுவ ஆட்சி என அடுத்தடுத்த திருப்பங்களை அந்நாடு சந்தித்தது.
இந்த சம்பவம் நடந்தபோது, மேற்கு ஜெர்மனியில் கணவர் வசீத் மியாவுடன், ஹசீனா வசித்து வந்துள்ளார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் காணப்பட்டது. வேறு வழியின்றி இந்தியாவில் அடைக்கலம் புகவேண்டிய நிலையே மிச்சமிருந்தது.
அப்போது, கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் இந்தியாவுக்கு தப்பினார் ஹசீனா. 1975 முதல் 1981 வரையிலான ஆறு ஆண்டுகளாக தங்களுடைய அடையாளங்களை மறைத்தபடி அவர்கள் இந்தியாவில் வாழ்ந்தனர். அவருக்கு, அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, உதவிக்கரம் நீட்டினார். ஹசீனாவுக்கு இந்தியாவில் பாதுகாப்பும், அடைக்கலமும் வழங்கப்பட்டது.
இதுபற்றி 2022-ம் ஆண்டு பேட்டியொன்றில் குறிப்பிட்ட ஹசீனா, இந்திரா காந்தி உடனடியாக எங்களுக்கு தகவல் அனுப்பி ஆதரவை தெரிவித்ததும், நாங்கள் டெல்லி திரும்ப முடிவு செய்தோம். டெல்லி சென்று விட்டால், பின்னர் எங்களுடைய நாட்டுக்கு நாங்கள் சென்று விட முடியும்.
இதன்பின், எங்களுடைய குடும்பத்தில் எத்தனை பேர் மீதமுள்ளனர் என்று அறிந்து கொள்ளவும் முடியும் என கூறினார். இதன்படி, டெல்லியில் பாதுகாப்பான ஒரு வீட்டில் 2 இளம் குழந்தைகள் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் ஹசீனா பலத்த பாதுகாப்புடன் ஒருவித அச்சத்துடனேயே, ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.
டெல்லியில் இந்திரா காந்தியை சந்தித்ததும், குடும்பத்தினர் 18 பேர் படுகொலை செய்யப்பட்ட விசயங்களை ஹசீனா அறிந்து கொண்டார். ஹசீனாவுக்கு அனைத்துவித ஏற்பாடுகளையும் இந்திரா காந்தி செய்ததுடன், ஹசீனாவின் கணவருக்கு வேலையும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்.
இந்தியாவில் தஞ்சமடைந்தபோது, முதலில் 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்க்கை சற்று கஷ்டத்துடனேயே சென்றது. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என 2 குழந்தைகளும், தாத்தா பாட்டியை பார்க்க வேண்டும் என அழுது கொண்டே இருந்தனர். ஹசீனாவின் இளைய சகோதரரை (ஷேக் ரஸ்செல்) பார்க்க வேண்டும் என கேட்டனர் என ஹசீனா அந்த பேட்டியில் நினைவுகூர்கிறார்.
முதலில், டெல்லியின் லஜ்பத் நகர்-3, 56 ரிங் ரோட்டில் வசித்த அவர், பின்னர் லுட்யென்ஸ் டெல்லியின் பண்டோரா சாலை பகுதிக்கு சென்று வசிக்க தொடங்கினார். பேட்டியில் அந்த நாட்களை நினைவுகூர்ந்த ஹசீனா, இந்தியாவுக்கும், இந்திரா காந்தி குடும்பத்தினருக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறேன் என கூறினார்.
இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் காந்தி குடும்பத்தினரை சந்திக்கும் வழக்கம் கொண்டிருந்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு பின் 1981, மே 17-ந்தேதி வங்காளதேசம் திரும்பிய பின் அவாமி லீக்கின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய வருகையால் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஊழல் வழக்கில் சிறை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்த அவர், 1996-ல் முதன்முறையாக பிரதமரானார். இந்த சூழலில், ஷேக் ஹசீனா மீண்டும் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். ஹசீனாவுக்கு 2-வது முறையாக இந்தியா புகலிடம் அளித்துள்ளது. இதுதவிர, 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போரில் வங்காளதேசம் ஈடுபட்டபோது, அந்நாடு விடுதலை அடைவதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது.