கோவை: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நாளை (ஆக. 6) நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் யார் என கவுன்சிலர்களிடம் கேள்வி எழுந்தது. மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பலரது பெயர் கூறப்பட்டன. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வென்றுள்ளனர்.
எனவே மேயராக அறிவிக்கப்படுபவர் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருந்தன. இதற்கிடையே கவுன்சிலர்களில் இருந்து ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய, திமுக கவுன்சிலர்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதன் இறுதியில் 29-வது வார்டு திமுக கவுன்சிலரான ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்றால் இவர் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்படுவார்.